சேலம் கூட்டுறவு சங்கத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக பால் வழங்கிய உற்பத்தியாளர்கள்
- சேலம் மாவட்டத்தில் ஆவினுக்கு மட்டும் தினசரி 5 லட்சம் லிட்டர் பால் வழங்கப்பட்டு வருகிறது.
- இன்று 2-வது நாளாக பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம்:
ஆவின் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்படும் பசும்பாலுக்கு 35 ரூபாயும், எருமைப்பாலுக்கு 44 ரூபாயும் வழங்கப்படுகிறது. இதனை பசும்பாலுக்கு ரூ.42 ஆகவும், எருமைப்பாலுக்கு ரூ.52 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
மேலும் விலையை உயர்த்தாவிட்டால் பால் உற்பத்தியாளர்கள் பாலை வழங்காமல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அறிவித்தனர்.
இதையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் நாசருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதை தொடர்ந்து நேற்று முதல் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சேலம் மாவட்டத்தில் ஆவினுக்கு மட்டும் தினசரி 5 லட்சம் லிட்டர் பால் வழங்கப்பட்டு வருகிறது. இன்று 30 சதவீத விவசாயிகள் பாலை ஆவினுக்கு வழங்காமல் புறக்கணித்தனர்.
இன்று 2-வது நாளாக பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பால் விநியோகம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பால் விலையை அரசு உயர்த்தி தராவிட்டால் வரும் நாட்களில் போராட்டத்தை தீவிரப்படுத்தி பால் வினியோகத்தை முற்றிலும் நிறுத்த உற்பத்தியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர், வீரபாண்டி உள்பட பல்வேறு பகுதிகளிலும் பால் உற்பத்தியாளர்கள் குறைந்த அளவிலேயே ஆவினுக்கு இன்று பால் விநியோகம் செய்தனர். இதனால் பால் தட்டுப்பாடு நிலவியது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
சேலம் பாகல்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பால் உற்பத்தியாளர்கள் உள்ளூர் பொதுமக்களுக்கு இலவசமாக பாலை வழங்கி தங்களது போராட்டத்தை தங்களது இரண்டாவது நாள் போராட்டத்தை தொடங்கினர்.
குறிப்பாக பாகல்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 260 பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாள்தோறும் 2500 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் நேற்று போராட்டத்தின் காரணமாக 40 லிட்டர் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று 2-வது நாள் யாரும் பால் ஊற்றாமல் பால் எடுத்த போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் ஆவின் நிறுவனம் மூலம் செய்யப்பட்டு வரும் பால் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு விரைந்து பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுபற்றி பால் உற்பத்தியாளர்கள் கூறுகையில், எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை ஆவினுக்கு பால் வழங்கமாட்டோம். பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்கவே இன்று இலவசமாக பால் வினியோகம் செய்தோம். அரசு எங்கள் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.