மெரினா கடற்கரையில் குடிநீர் தொட்டி பராமரிக்கப்படுமா?
- சென்னை மெரினா கடற்கரை ஆசியாவிலேயே மிகப்பெரிய மணல் பரப்பு கொண்ட கடற்கரையாக திகழ்ந்து வருகிறது.
- குழாயில் நீர்கசிவு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
மெரினா கடற்கரையில் தாகம் தீர்க்கும் குடிநீர் தொட்டி பழுதடைந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
சென்னை மெரினா கடற்கரை ஆசியாவிலேயே மிகப்பெரிய மணல் பரப்பு கொண்ட கடற்கரையாக திகழ்ந்து வருகிறது. இங்கு தினமும் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடற்கரையின் அழகை ரசிக்க மற்றும் பொழுது போக்க வருகை தருகிறார்கள்.
மெரினா கடற்கரையின் அழகை பாதிக்கும் வகையில் அங்குள்ள மணல் பரப்பில் பழுதடைந்த கடைகள், குப்பைகள் நிறைந்து உள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்காக அங்கு அமைக்கப்பட்டிருந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி தற்போது பழுதடைந்து உள்ளது. இதனால் குடிநீர்தொட்டி முழுவதும் அசுத்தம் நிறைந்து காணப்படுகிறது.
இதனால் அங்கு குடிநீர் அருந்த செல்ல மக்கள் தயங்குகிறார்கள். குடிநீர் பைப்புகள் சரிவர பராமரிக்கப்படாததால் உடைந்து உள்ளன. குழாயில் நீர்கசிவு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் தொட்டியை சீரமைப்பு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.