தமிழ்நாடு

மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தை அமைச்சர் மெய்யநாதன் அறிமுகம் செய்து வைத்தார்.

10 ரூபாய் நாணயம் செலுத்தினால் மஞ்சப்பை கிடைக்கும்- சென்னையில் செயல்பாட்டுக்கு வந்தது இயந்திரம்

Published On 2022-06-05 16:07 GMT   |   Update On 2022-06-05 16:07 GMT
  • பல்வேறு இயற்கைப் பாதுகாப்பு முன்னெடுப்புகளைத் தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
  • மஞ்சப்பை திட்டத்திற்கு வரவேற்பு கிடைக்கும்பட்சத்தில், தமிழகம் முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.

சென்னை:

பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சள் பைகளை பயன்படுத்தும் விதமாக, 'மீண்டும் மஞ்சப்பை' என்ற மக்கள் இயக்கத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து இந்த இயக்கத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் பணியில் சுற்றுச்சூழல் துறை தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.

அதன்படி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இந்த இயந்திரத்தை இன்று அறிமுகம் செய்துவைத்தார். இந்த இயந்திரத்தில் 10 ரூபாய் நாணயம் செலுத்தினால் துணியால் ஆன மஞ்சள் பை வழங்கும். மேலும் கள ஆய்வுக்காக புதிய 25 வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார் அமைச்சர்.

மேலும், சோதனை முயற்சியாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தை சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகு தொடங்கி வைத்தார். வியாபாரிகள், பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்லும் சந்தையில இந்த வசதி தொடங்கபட்டுள்ளதால், பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை வெகுவாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும்பட்சத்தில், தமிழகம் முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், மீண்டும் மஞ்சப்பை, பசுமைத் தமிழகம் இயக்கம், முதன்முறையாக Tamil Nadu Green Climate Company என்னும் சிறப்பு நோக்க வாகனம் உள்ளிட்ட பல இயற்கைப் பாதுகாப்பு முன்னெடுப்புகளைத் தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், உலகச் சுற்றுச்சூழல் நாளில் நமக்கு இருப்பதே ஒரே உலகம் என்பதை மனதில்கொண்டு, அனைத்து வகையிலும் அதனைக் காக்கப் பாடுபடுவோம் என்றும் தெரிவித்திருந்தார்.

Tags:    

Similar News