தமிழ்நாடு செய்திகள்

பெண் வேடம் அணிந்து வந்து மூதாட்டியிடம் நகை பறிக்க முயற்சி

Published On 2023-01-14 13:58 IST   |   Update On 2023-01-14 13:58:00 IST
  • அழகான இளம்பெண் போன்ற தோற்றம் ஏற்படுத்திக் கொண்டு, நைட்டி அணிந்து கொண்டு வந்த ஒரு வாலிபர், அலமேலு வீட்டுக்கதவை தட்டியுள்ளார்.
  • திடீரென அந்த நபர் அலமேலு கழுத்தில் அணிந்து இருந்த 6 பவுன் தங்க செயினை பறிக்க முயன்றார்.

அன்னதானப்பட்டி:

சேலம் அன்னதானப்பட்டி, அகத்தியர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அலமேலு (வயது 70). இவரது குடும்பத்தினர் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்று விட்டனர். இதையடுத்து வீட்டில் தனியாக இருந்த அலமேலு, தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது மாலை 3.15 மணியளவில், முழுக்க அலங்காரம் செய்து கொண்டு, அழகான இளம்பெண் போன்ற தோற்றம் ஏற்படுத்திக் கொண்டு, நைட்டி அணிந்து கொண்டு வந்த ஒரு வாலிபர், அலமேலு வீட்டுக்கதவை தட்டியுள்ளார்.

அப்போது சத்தம் கேட்டு எழுந்து வந்த மூதாட்டியிடம் அந்த நபர், "பாட்டி, இந்த பகுதியில் உள்ள எனது உறவினர் வீட்டிற்கு வந்தேன். முகவரி தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். கண்டு பிடிக்க முடியவில்லை. அலைந்து திரிந்து, களைப்பாக மயக்கம் வருகிறது. கொஞ்சம் குடிக்க தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டதாக தெரிகிறது. தொடர்ந்து அந்த நபர் மூதாட்டியிடம் ஏதேதோ நைசாக பேசியபடி, அவரது கவனத்தை திசை திருப்ப முயற்சித்துள்ளார். அப்போது திடீரென அந்த நபர் அலமேலு கழுத்தில் அணிந்து இருந்த 6 பவுன் தங்க செயினை பறிக்க முயன்றார்.

இதனை சற்றும் எதிர்பாராத அலமேலு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மின்னல் வேகத்தில் சுதாரித்துக்கொண்ட மூதாட்டி, பெண் வேடமணிந்து வந்த அந்த வாலிபரை கெட்டியாக இறுக பிடித்துக்கொண்டு திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். அலமேலு சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் அந்த நபர் மூதாட்டியை கீழே தள்ளி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி அதனடிப்படையில் ஆய்வு செய்தனர். அதில் சுமார் 30 வயதுள்ள நபர் நைட்டி அணிந்து, பெண் வேடத்தில் அப்பகுதியில் நடந்து செல்வது தெரிந்தது. பெண் வேடம் அணிந்து வந்த வாலிபர், கண் இமைக்கும் நேரத்தில் மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News