தமிழ்நாடு

800 உயிர்களை காப்பாற்றிய ரெயில்வே ஊழியருக்கு பரிசு ரூ.5000

Published On 2023-12-23 13:51 GMT   |   Update On 2023-12-23 13:51 GMT
  • அதிகனமழையிலும் தண்டவாள பராமரிப்பு பணியை ஊழியர்கள் மேற்கொண்டனர்
  • செல்வகுமார் உரிய நேரத்தில் தகவல் தந்ததால் ஸ்ரீவைகுண்டத்தில் ரெயில் நிறுத்தப்பட்டது

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கனமழை பெரும் சேதத்தை விளைவித்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 17, 18 அன்று அதிகனமழை பெய்தது. ரெயில் தண்டவாளங்களில் நீர் நிரம்பி ஓடியதால் ரெயில் போக்குவரத்து முற்றிலுமாக செயலிழந்தது.

ஆனால் அதிகனமழையிலும் இருப்பு பாதையின் பராமரிப்பை தண்டவாள பராமரிப்பு ஊழியர்கள் ஆய்வு செய்து வந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே மண் அரிப்பினால் ரெயில் தண்டவாளம் சேதம் அடைந்தது. இதனை கண்ட தண்டவாள பராமரிப்பாளர் உரிய நேரத்தில் தகவல் அளித்ததால் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது.

அந்த ரெயிலில் சுமார் 800க்கும் மேற்பட்ட பயணிகள் வெவ்வேறு இடங்களில் இறங்கும் நோக்கில் பயணித்து வந்தனர்.

துரிதமாக செயல்பட்டு தனது கடமையை சிறப்பாக செய்து 800 உயிர்களை காப்பாற்றிய பராமரிப்பாளர் செல்வகுமாரை ரெயில்வே நிர்வாகம் பாராட்டி உள்ளது.

அத்துடன் அவருக்கு ரூ.5000 கவுரவ பரிசாகவும் ரெயில்வே துறை அளித்துள்ளது.

செல்வகுமாரை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வரும் வேளையில், 800 உயிர்களை காப்பாற்றியவருக்கு வெறும் ரூ.5000 என்பது ஒரு உயிரின் மதிப்பு ரூ.6.25 என்பது போல் உள்ளதாக விமர்சித்து, செல்வகுமார் ஆற்றிய நற்செயலுக்கு உரிய சன்மானம் வழங்க வேண்டியது ரெயில்வே துறையின் கடமை எனவும் பயனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News