மடிப்பாக்கம், மணப்பாக்கம் பகுதிகளில் விரைவில் குழாய் மூலம் குடிநீர்
- மணப்பாக்கத்தில் வசிக்கும் 12 ஆயிரம் குடும்பத்தினர் ஆழ்துளை கிணற்று தண்ணீரை மட்டுமே நம்பி உள்ளனர்.
- நீலாங்கரை, செம்மஞ்சேரி ஆகிய பகுதிகளுக்கு இன்னும் 2 ஆண்டுகளில் குடிநீர் வழங்கப்பட உள்ளது.
சென்னை:
சென்னையை சுற்றியுள்ள பல பகுதிகளை சென்னை நகருடன் இணைத்து சென்னை மாநகராட்சி பகுதிகள் விரிவாக்கம் செய்யப்பட்டன.
சென்னை நகருடன் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.
புதிதாக சேர்க்கப்பட்ட 7.9 லட்சம் குடும்பங்களுக்கு 61.42 மில்லியன் கன அடி தண்ணீர் வழங்கப்பட உள்ளது. இதற்கான திட்டப்பணிகள் ரூ.428.17 கோடி செலவில் நடக்கிறது.
சென்னை மாநகராட்சியுடன் சேர்க்கப்பட்ட நெற்குன்றம், மடிப்பாக்கம், ராமாபுரம், மணப்பாக்கம், மாதவரம் ஆகிய பகுதிகளில் விரைவில் குழாய் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் குடிநீர் வினியோகத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த பகுதிகள் சென்னை மாநகராட்சியுடன் சேர்க்கப்பட்டு 12 ஆண்டுகளுக்கு பிறகு குழாய் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட உள்ளது.
மணப்பாக்கத்தில் வசிக்கும் 12 ஆயிரம் குடும்பத்தினர் ஆழ்துளை கிணற்று தண்ணீரை மட்டுமே நம்பி உள்ளனர். பல இடங்களில் கிணறு வறண்டு போனதால் டேங்கர் லாரி தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களின் குடிநீர் பிரச்சனை விரைவில் தீர உள்ளது.
நீலாங்கரை, செம்மஞ்சேரி ஆகிய பகுதிகளுக்கு இன்னும் 2 ஆண்டுகளில் குடிநீர் வழங்கப்பட உள்ளது. செம்மஞ்சேரியில் பொதுமக்கள் பலர் தனியார் கிணறு மற்றும் பஞ்சாயத்து கிணற்று தண்ணீரை பயன்படுத்தி வருகிறார்கள். இன்னும் 2 ஆண்டுகளில் அவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட உள்ளது.
மாதவரம் பகுதியில் குழாய் மூலம் குடிநீர் வழங்குவதற்கான பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டன. வினியோகம் செய்வதில் கசிவு உள்ளதா? என்று குடிநீர் வாரியம் சோதனை நடத்தி வருகிறது. விரைவில் குடிநீர் வழங்கும் பணிகள் தொடங்கும். அதன் பிறகு பொதுமக்கள் குடிநீர் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.