பலத்த மழையால் நிரம்பியது- லட்சுமிபுரம் ஏரியில் இருந்து 460 கன அடி நீர் வெளியேற்றம்
- பொன்னேரி அருகே உள்ள லட்சுமி புரம் அணைக்கட்டுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
- ஏராளமானோர் தண்ணீர் நிரம்பி உள்ள லட்சுமி புரம் அணைக்கட்டை பார்த்து ரசித்து செல்கிறார்கள்.
பொன்னேரி:
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கர்னீத் மலைப்பகுதியில் ஆரணி ஆறு தொடங்குகிறது.
இந்த ஆறு பிச்சாட்டூர் அணையின் முனைப்பை கடந்து தமிழக பகுதியான ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக லட்சுமிபுரம் அணைக்கட்டை கடந்து பழவேற்காடு முகத்து வாரத்தில் கடலில் கலக்கின்றது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக ஆரணி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் பாய்ந்து வருகிறது. இதனால் பொன்னேரி அருகே உள்ள லட்சுமி புரம் அணைக்கட்டுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
தொடர் மழை காரணமாக லட்சுமி புரம் அணைக்கட்டு முழுவதும் நிரம்பி உள்ளது. இதைத் தொடர்ந்து லட்சுமிபுரம் அணைக்கட்டில் இருந்து 460 கன அடி மழைநீர் வெளியேறி வருகிறது. அதில் ஏராளமான பேர் மீன்பிடித்து வருகின்றனர். உல்லாச குளியலும் போடுகின்றனர். இதனால் அப்பகுதி சுற்றுலா தளம்போல் மாறி உள்ளது. ஏராளமானோர் தண்ணீர் நிரம்பி உள்ள லட்சுமி புரம் அணைக்கட்டை பார்த்து ரசித்து செல்கிறார்கள்.