தமிழ்நாடு

கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வந்த ஜெயலலிதாவின் கார் டிரைவர் ஐயப்பன்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதாவின் கார் டிரைவரிடம் சி.பி.சி.ஐ.டி விசாரணை

Published On 2023-10-17 05:30 GMT   |   Update On 2023-10-17 05:30 GMT
  • கொடநாடு வழக்கினை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
  • போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் செயல்பட்டு வரும் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஐயப்பன் ஆஜரானார்.

கோவை:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது.

இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் இறந்து விட்டார்.

இந்த வழக்கு ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தற்போது இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ள போலீசார் அண்மையில் இந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில் இடைக்கால அறிக்கையும் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் கார் டிரைவரான ஐயப்பனிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு செய்தனர்.

இதற்காக அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்மனும் அனுப்பப்பட்டது. அதன்படி இன்று கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் செயல்பட்டு வரும் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஐயப்பன் ஆஜரானார்.

அவரிடம் சி.பி.சி.ஐ.டி அதிகாரி முருகவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அவரிடம் கொடநாடு பங்களா குறித்தும், பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை மேற்கொண்டனர்.

அவரும் தனக்கு தெரிந்த பதில்களை அதிகாரிகளிடம் தெரிவித்தார். அதனை போலீசார் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.

முன்னதாக ஜெயலலிதாவின் கார் டிரைவர் ஐயப்பன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, என்னிடம் ஏற்கனவே தனிப்படை போலீசார் விசாரித்தனர். தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்த சம்மன் அனுப்பியதால், விசாரணைக்கு ஆஜராகி உள்ளேன் என்றார். 

Tags:    

Similar News