தமிழ்நாடு

தமிழ் புத்தாண்டான பொங்கலுக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு: அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு

Published On 2023-12-25 03:59 GMT   |   Update On 2023-12-25 05:22 GMT
  • மழைநீர் வடிகால் திட்டம் தற்போது முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • தினமும் சுமார் ஒரு லட்சம் பயணிகள் பயன்படுத்தும் வகையில் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.

சென்னை கோயம்போடு பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து ஊர்களுக்கும் பேருந்துகள் புறப்பட்டு செல்வதால் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் ஊரப்பாக்கம் அருகே கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும் வகையில் பிரமாண்ட பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த பேருந்து நிலையம் சில மாதங்களுக்கு முன்பே திறக்கப்பட இருந்தது. பேருந்து நிலையம் திறக்கப்படுவதற்கு முன்னதாக கனமழை பெய்தது. மழைநீர் செல்வதற்கு போதிய வகையில் மழைநீர் வடிகால் ஏற்படுத்தாததால் மழை நீர் பேருந்து நிலையத்திற்குள் குளம்போல் தேங்கியது.

இதனால் மழைநீர் முழுவதும் வடிந்து செல்லும் வகையில் வடிகால் பணி முழுமையாக முடிவடைந்ததும் பேருந்து நிலையம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அடுத்த மாதம் ஜனவரி 15-ந்தேதி பொங்கல் பண்டிகை (தமிழ் புத்தாண்டு) வருகிறது. அதற்குள் இந்த பேருந்து நிலையம் திறக்கப்படும் என தமிழக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். 1200 மீட்டருக்கு மழைநீர் வடிகால் பணி தற்போது நிறைவு பெற்றுள்ளது எனவும் தெரிவித்தார்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 2310 பேருந்துகள் இயக்கப்படும். நாளொன்றுக்கு ஒரு லட்சம் பேர் பயன்படுத்தும் வகையில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் புத்தாண்டு சித்திரை 1-ந்தேதி கொண்டாடப்பட்டு வரும் நிலையில், திமுக தலைவர்கள் தை 1-ந்தேதியைத்தான் தமிழ்புத்தாண்டு எனக் கூறி வருகின்றனர் என்பது குறிப்படத்தக்கது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டும் பணி 2019, பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. சுமாா் 88 ஏக்கா் நிலத்தில் ரூ.400 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்தில் 2,000 பேருந்துகள் வரை வந்து செல்லும் வகையிலும், 270 காா்கள் , 3,500 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையிலும் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags:    

Similar News