தமிழ்நாடு செய்திகள்

டீ கடை உரிமையாளரிடம் ரூ.7 ஆயிரம் பாக்கியை வழங்கிய கரியாலூர் போலீசார்

Published On 2023-08-19 15:13 IST   |   Update On 2023-08-19 15:13:00 IST
  • கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசாரிடையே காட்டுத்தீ போல பரவியது.
  • இன்று காலை டீக்கடை உரிமையாளரை அழைத்த போலீசார், அவரிடம் டீ குடித்த பாக்கித்தொகையான ரூ.7 ஆயிரத்தை வழங்கினர்.

கச்சிராயபாளையம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் கரியாலூர் போலீஸ் நிலையம் உள்ளது. இங்கு பணி செய்யும் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட போலீசார், அருகிலுள்ள டீக்கடையில் டீ குடிப்பது வழக்கம்.

ஒரு டீ ரூ.6-க்கு விற்கப்பட்டு வரும் இந்த கடைக்கு கரியாலூர் போலீசார் ரூ.7 ஆயிரம் கடன் வைத்துள்ளனர். இந்த தொகையை போலீசாரிடம் கேட்க முடியாமல், கடை உரிமையாளர் இருந்து வந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் சென்றது. இது அங்கிருந்து கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பாக விளக்கம் கோரி கரியாலூர் போலீசாருக்கு நேற்று மாலை கடிதம் அனுப்பப்பட்டது.

இந்த விஷயம் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசாரிடையே காட்டுத்தீ போல பரவியது. இதனால் கலக்கமடைந்த கரியாலூர் போலீசார் கலந்தாலோசித்தனர்.

இன்று காலை டீக்கடை உரிமையாளரை அழைத்த போலீசார், அவரிடம் டீ குடித்த பாக்கித்தொகையான ரூ.7 ஆயிரத்தை வழங்கினர். மேலும், இனிமேல் தினமும் வழங்கும் டீக்கு அன்றைய தினமே பணத்தை வாங்கிக்கொள்ள கடை உரிமையாளரிடம் போலீசார் கூறினார்கள்.

இதனை படம் பிடித்து டீ பாக்கி கடைக்காரரிடம் வழங்கப்பட்டு விட்டது என்ற தலைப்பில் போலீசாரின் வாட்ஸ் அப் குரூப்பில் பரவவிட்டுள்ளனர்.

அதேசமயம், டீ பாக்கி குறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பியது யார் என்பது குறித்தும் கரியாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் போலீசார் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News