குடியிருப்புகள்-விளைநிலங்களை சூழ்ந்த தண்ணீர் வடிந்தது: தெருக்களில் வெள்ளம் தேங்கி இருப்பதால் மக்கள் கடும் அவதி
- சுசீந்திரம் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் இன்றும் வடியவில்லை.
- குலசேகரம், கீரிப்பாறை, தடிக்காரன்கோணம் பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொட்டித்தீர்த்த மழை மாவட்டத்தையே புரட்டி போட்டது. தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். தற்பொழுது மழை சற்று குறைந்துள்ளதையடுத்து வீடுகளை சூழ்ந்த வெள்ளம் வடிய தொடங்கி உள்ளது.
நாகர்கோவில் மீனாட்சி கார்டன் பகுதியில் 450-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதி முற்றிலுமாக தண்ணீர் சூழ்ந்து தீவாக காட்சியளித்தது. அங்கு தண்ணீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் நடவடிக்கை மேற்கொண்டது.
இந்த நிலையில் அங்கு தற்போது தண்ணீர் வடிந்து வருகிறது. ஆனால் தண்ணீர் முழுமையாக இன்னும் வடியாததால் கீழ் தளத்தில் உள்ள பொதுமக்கள் உறவினர் வீடுகளில் தங்கி உள்ளனர். அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகமும், தன்னார்வலர்களும் செய்து வருகிறார்கள்.
ரெயில்வே குடியிருப்பு பகுதியை சூழ்ந்த வெள்ளம் வடிந்ததையடுத்து அங்கு இயல்பு நிலை திரும்பி உள்ளது. சுசீந்திரம் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் இன்றும் வடியவில்லை. 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.
அந்த பகுதியில் உள்ள சாலைகளில் 2 நாட்களாக தண்ணீர் தேங்கி கிடப்பதால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதேபோல் தோவாளை அண்ணா காலனி பகுதியிலும் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த தண்ணீர் படிப்படியாக வடிந்து வருகிறது. ஈசாந்தி மங்கலம் பகுதியில் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர் முழுமையாக வடிந்ததால் சகஜ நிலை திரும்பி உள்ளது. திருவாழ்மார்பன் கோவிலை சூழ்ந்து இருந்த வெள்ளமும் முற்றிலுமாக வடிந்துள்ளது.
குமரி மேற்கு மாவட்ட பகுதிகளிலும் மழை குறைந்ததையடுத்து தாழ்வான பகுதியில் தேங்கிருந்த தண்ணீர் வடிந்தது. இருப்பினும் நிவாரண முகாம்களில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கி உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மாவட்ட நிர்வாகம் சார்பிலும், தன்னார்வலர்கள் சார்பிலும் வழங்கப்பட்டு வருகிறது.
சுசீந்திரம் பகுதியில் விளைநிலங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சேத மதிப்பீடு குறித்து வேளாண் துறை அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
குலசேகரம், கீரிப்பாறை, தடிக்காரன்கோணம் பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மழை குறைந்தாலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.