தமிழ்நாடு செய்திகள்

கோவையில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.78 லட்சம் பறிமுதல்: 3 பேரிடம் விசாரணை

Published On 2023-11-10 09:44 IST   |   Update On 2023-11-10 09:46:00 IST
  • சிமெண்டு சாக்குப்பையில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
  • கிடைத்த பணமான ரூ.78 லட்சத்தை கேரளா கொண்டு செல்வதற்காக ஒரு காரில் இருந்து மற்றொரு காருக்கு மாற்றினோம்.

கோவை:

கோவை மதுக்கரை போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் இளவேந்தன் தலைமையில் இரவு 7.30 மணியளவில் செட்டிப்பாளையம் பிரிவு அருகே ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த சிலர் ஒரு காரில் இருந்து மற்றொரு காருக்கு சிமெண்டு சாக்குப்பைகளை மாற்றிக் கொண்டு இருந்தனர். அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனையடுத்து போலீசார் காரின் அருகே சென்று சோதனை செய்தனர்.

அப்போது சிமெண்டு சாக்குப்பையில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து போலீசார் அங்கு நின்றுகொண்டு இருந்த 3 பேரையும் மடக்கி பிடித்தனர். மேலும் சாக்குப்பையில் இருந்த பணம் மற்றும் 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த சசிகாந்த் (வயது 48). இவரது மகன் நிகில் (22), சுரேஷ் (45) என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் அவர்களிடம் பணம் எப்படி வந்தது என விசாரணை நடத்தினர்.

நாங்கள் கேரள மாநில வடக்கஞ்சேரியில் தங்க நகை வியாபாரம் செய்து வருகிறோம். கோவை ராஜ வீதியை சேர்ந்த மனோஜ்குமார் என்பவரது வீட்டில் 1,403 கிராம் தங்க கட்டிகளை விற்றோம். அதில் கிடைத்த பணமான ரூ.78 லட்சத்தை கேரளா கொண்டு செல்வதற்காக ஒரு காரில் இருந்து மற்றொரு காருக்கு மாற்றினோம். அப்போது எங்களை போலீசார் பிடித்து விட்டனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆனால் அவர்களிடம் பணத்தை கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லை. எனவே மதுக்கரை போலீசார் ரூ.78 லட்சம் பணம், 2 கார்கள் மற்றும் 3 பேரையும் மத்திய வருமான வரித்துறை குற்ற புலனாய்வு துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News