தமிழ்நாடு

பழனி கோவிலில் நன்கொடை செலுத்தும் புதிய வசதி அறிமுகம்

Published On 2024-01-09 05:30 GMT   |   Update On 2024-01-09 09:40 GMT
  • அன்னதானத்தில் சாதாரண நாட்களில் சுமார் 8 ஆயிரம் பேரும், விழா நாட்களில் 30 ஆயிரம் பேர் வரையிலும் உணவருந்திச் செல்கின்றனர்.
  • பக்தர்கள் அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு தங்களால் இயன்ற காணிக்கைகளை வழங்கி வருகின்றனர்.

பழனி:

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை மலைக்கோவிலில் அமைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் மூலம் செலுத்தி வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக பழனி கோவிலில் நாள் தோறும் அன்னதான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

சாதம், சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொறியல், அப்பளம், பாயாசம் ஆகியவற்றுடன் வழங்கப்படும் அன்னதானத்தில் சாதாரண நாட்களில் சுமார் 8 ஆயிரம் பேரும், விழா நாட்களில் 30 ஆயிரம் பேர் வரையிலும் உணவருந்திச் செல்கின்றனர்.

பக்தர்கள் அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு தங்களால் இயன்ற காணிக்கைகளை வழங்கி வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் கியூ.ஆர்.கோடு வசதி உள்ள நிலையில் பழனி கோவிலிலும் இது போன்ற வசதி தொடங்கப்பட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.


ஏனெனில் ரெயில் நிலையம், வணிக வளாகங்கள் போன்றவற்றில் பணப்பரிவர்த்தனை முற்றிலும் குறைந்து கியூ.ஆர். கோடு வசதி மூலமே பணம் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களும் குறைந்த அளவு பணம் கொண்டு வரும் சமயத்தில் அன்னதானம் உள்ளிட்ட திட்டங்களுக்கு நன்கொடை வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு தைப்பூசத் திருவிழா நெருங்கி வரும் நிலையில் பழனி மலைக்கோவிலில் கியூ.ஆர்.கோடு மூலம் நன்கொடை செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோவிலின் பல்வேறு இடங்களில் இது குறித்து ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதே போல் ரோப் கார் நிலையம், மின் இழுவை ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் கியூ.ஆர். கோடு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News