4 ஆண்டு பி.எட். படிப்பு அறிமுகம்: 2 ஆண்டு பி.எட். படிப்புக்கு இனிமேல் அனுமதி வழங்கப்படாது
- தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில், தேசிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ், ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி பட்டப்படிப்பை அறிமுகம் செய்துள்ளது.
- ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எட்., பட்டப்படிப்பு வழங்க விரும்பும் கல்வி நிறுவனங்கள், அதற்கான அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
சென்னை:
நாடு முழுவதும் இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்த பட்டதாரிகள், 2 ஆண்டு பி.எட். பட்டப்படிப்பை தேர்வு செய்கின்றனர். இதற்கிடையில், தேசிய கல்விக் கொள்கை 2020-ன்படி, ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எட். பட்டப்படிப்பை என்.சி.இ.டி. (தேசிய ஆசிரியர் கல்வி குழுமம்) கடந்த கல்வியாண்டில் அறிமுகம் செய்தது. இருப்பினும், தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் 2 ஆண்டு பி.எட். பட்டப்படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், 2024-25-ம் கல்வியாண்டு முதல் 2 ஆண்டு சிறப்பு பி.எட். பட்டப்படிப்புகளுக்கு கல்வி நிறுவனங்களுக்கு புதிய அங்கீகாரம் வழங்கப்படாது என்று இந்திய மறுவாழ்வு கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, இந்திய மறுவாழ்வு கவுன்சில் (ஆர்.சி.ஐ.) உறுப்பினர் செயலாளர் விகாஸ் திரிவேதி, வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில், தேசிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ், ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி பட்டப்படிப்பை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் 2 ஆண்டு பி.எட்., பட்டப்படிப்பு ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எட்., பட்டப்படிப்புகாக மாற்றம் செய்யப்படுகிறது. எனவே, 2024-25-ம் கல்வியாண்டில் எந்த ஒரு கல்வி நிறுவனங்களுக்கும் 2 ஆண்டு சிறப்பு பி.எட்., பட்டப்படிப்புக்கான புதிய அங்கீகாரம் வழங்க வேண்டாம் என கவுன்சில் முடிவு செய்துள்ளது. ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எட்., பட்டப்படிப்பு வழங்க விரும்பும் கல்வி நிறுவனங்கள், அதற்கான அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.