தமிழ்நாடு

சென்னையில் போதை மாத்திரை விற்பனை அதிகரிப்பு

Published On 2024-03-30 05:47 GMT   |   Update On 2024-03-30 05:47 GMT
  • 2021-ம் ஆண்டு முதல் போதை மாத்திரைகள் விற்பனை தொடர்ச்சியாகவே நடைபெற்று வருகிறது.
  • போதை மாத்திரைகளுக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் அது கட்டுக்குள் வராமலேயே உள்ளது.

சென்னை:

சென்னை மாநகரில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக கஞ்சா விற்பனையை தடுக்க அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வாகனங்களில் கடத்தப்படும் கஞ்சா பொட்டலங்களை ரகசிய தகவலின் பேரில் போலீசார் பறிமுதல் செய்து வருகிறார்கள். பஸ்கள் மற்றும் ரெயில்கள் மூலம் கடத்தப்படும் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டு வருகிறது. இப்படி வாகன சோதனையின் மூலமாக போதைப்பொருட்கள் பிடிபடுவதால் போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து வாங்கி சென்னையில் விற்பனை செய்து வருகிறார்கள்.

படித்த இளைஞர்களும் இதில் அதிக அளவில் ஈடுபட்டு வருகிறார்கள். கூரியர் சர்வீஸ் மூலமாக இந்த மாத்திரைகளை போதை கும்பலிடம் இருந்து குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வாங்கி சப்ளை செய்து வருகிறார்கள். மருத்துவத் துறையில் தூக்கமின்மை மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளாக பயன்படுத்தப்படும் இந்த மாத்திரைகளை மருந்து சீட்டுகள் இல்லாமல் கொடுக்கக்கூடாது.

இதுதொடர்பாக போலீசார் அனைத்து மருந்து கடைகளுக்கும் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள். இதனால் மருந்து கடைகளில் இந்த போதை மாத்திரைகளை நேரடியாக வாங்குவது சிரமமான விஷயமாகவே இருந்து வருகிறது. அதே நேரத்தில் சட்ட விரோதமாக இந்த போதை மாத்திரைகள் பார்சல்கள் மூலமாக அனுப்பப்பட்டு சென்னையில் கல்லூரி மாணவர்கள், வாலிபர்களுக்கு சப்ளை செய்யப்பட்டு வருகிறது என மருந்து கடை உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, டாக்டர்களின் பரிந்துரை மருந்து சீட்டு இல்லாமல் மேற்கண்ட மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது என்கிற சட்டத்தையும் மீறி போதைக்காக மாத்திரைகளை ஆன்லைனில் விற்று வருகிறார்கள். அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மற்ற போதைப்பொருட்களை பயன்படுத்தும்போதும் மது குடித்த பிறகும் தலை சுற்றல் உள்ளிட்ட போதைக்கான அறிகுறிகள் காணப்படும் என்றும் ஆனால் இந்த மாத்திரைகளை பயன்படுத்துவதால் அதுபோன்ற அறிகுறிகள் எதுவும் இருக்காது. உள்ளுக்குள் இருந்தே இந்த போதை மாத்திரை வேலை செய்யும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் போதை மாத்திரைகளை பயன்படுத்தி இருப்பவர்களை வீட்டில் இருக்கும் பெற்றோரால் கூட கண்டுபிடிக்க முடியாது என்பதால் இளைஞர்கள் அதிக அளவில் அதனை பயன்படுத்தி வரும் அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருக்கிறது. இப்படி சென்னை மாநகரில் சத்தம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வரும் போதை மாத்திரைகள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அதிக அளவில் பிடிபட்டுள்ளன. 23 வழக்குகள் போடப்பட்டு 40 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். 2000 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டு உள்ளன. இந்த 40 பேரின் வங்கி கணக்குகளையும் முடக்குவதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். போதை மாத்திரைகளை வாங்குவதற்கு ஆன்லைன் மூலமாகவே பணம் செலுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

2021-ம் ஆண்டு முதல் போதை மாத்திரைகள் விற்பனை தொடர்ச்சியாகவே நடைபெற்று வருகிறது. இதுவரை 1243 வழக்குகள் போடப்பட்டு 2423 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இப்படி தொடர்ச்சியாக போதை மாத்திரைகளுக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் அது கட்டுக்குள் வராமலேயே உள்ளது. போதை மாத்திரைகளை பொடியாக்கி அதனை தண்ணீரில் கரைத்து நரம்பு வழியாக ஊசி மூலம் உடலில் ஏற்றுக் கொள்கிறார்கள். இதனை ஏதாவது ஒரு இடத்தில் இருந்தே பயன்படுத்தி விடவும் முடிகிறது. இப்படி போதை மாத்திரைகள் சென்னை மாநகர இளைஞர்களின் உயிரை கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரும் நிலையில் அதனை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

Similar News