தமிழ்நாடு செய்திகள்

ஐந்தருவியில் நான்கு கிளைகளில் மிதமான தண்ணீர் விழுவதையும் அதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்வதையும் காணலாம்.

குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு- ஐந்தருவியில் மிதமான அளவில் தண்ணீர்

Published On 2023-06-19 10:32 IST   |   Update On 2023-06-19 10:32:00 IST
  • குற்றாலம் அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் தொடங்கும்.
  • நேற்று விடுமுறை தினம் என்பதால் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர்.

தென்காசி:

தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள குற்றாலம் அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் தொடங்கும்.

அப்போது இங்குள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றுருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வருவார்கள்.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான சீசன் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்திலும், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் போதிய அளவு தென்மேற்கு பருவமழை இன்னும் பெய்யாததால் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர்வரத்து குறைவாகவே காணப்படுகிறது.

தென்காசி மாவட்டத்தில் புளியரையை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று மாலையில் பெய்த மிதமான மழை காரணமாக குற்றாலம் ஐந்தருவிக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது.

ஐந்தருவில் உள்ள 4 கிளைகளில் மிதமான அளவு தண்ணீர் விழத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு ஆர்வம் காட்டத்தொடங்கி உள்ளனர்.

நேற்று விடுமுறை தினம் என்பதால் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர். இன்று காலை முதலும் அருவிகளை ஒட்டிய பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசி வருவதால் இன்றும் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இன்று வாரத்தின் முதல் வேலை நாள் என்பதால் ஐந்தருவியில் குறைந்த அளவே சுற்றுலா பயணிகளின் கூட்டம் காணப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து தொடர்ந்து வீசி வரும் குளிர்ந்த காற்றின் காரணமாக இன்னும் ஒரு சில நாட்களில் குற்றால சீசன் முழுமையாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News