தமிழ்நாடு

சுபாஷ் சந்திர கபூரை சிறைக்கு அழைத்துச்சென்றபோது எடுத்த படம்.

சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூருக்கு 10 ஆண்டு சிறை- கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பு

Published On 2022-11-02 02:57 GMT   |   Update On 2022-11-02 02:57 GMT
  • சிலைகள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கினர்.
  • 7 பேரை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கும்பகோணம்:

அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த 2008-ம் ஆண்டு 20 சாமி சிலைகள் மாயமானது. இந்த சிலைகள் மாயமானது குறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் எந்தவித தகவலும் கிடைக்காததால் இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இதனைத்தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மாயமான சிலைகள் குறித்து தீவிர விசாரணையில் இறங்கினர். விசாரணையில் சுத்தமல்லி வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்த சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டது தெரிய வந்தது.

இந்த சிலைகள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கினர்.

இதனைத்தொடர்ந்து இந்த சிலைகள் கடத்தலில் ஈடுபட்டதாக சிலை கடத்தல் மன்னன் அமெரிக்காவில் வசித்து வந்த சுபாஷ் சந்திர கபூர் (வயது 73), சென்னையை சேர்ந்த சஞ்சீவி அசோகன் (60), பாக்கியகுமார் (50), மதுரையை சேர்ந்த மாரிச்சாமி (65), ஸ்ரீராம் என்கிற சுலோகு (52), பார்த்திபன் (55), சிதம்பரத்தை சேர்ந்த பிச்சுமணி (60) ஆகிய 7 பேரை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதில் பிச்சுமணி அப்ரூவரானார். மீதம் உள்ள சுபாஷ் சந்திரகபூர், சஞ்சீவிஅசோகன், மாரிச்சாமி, பாக்கியகுமார், ஸ்ரீராம் (என்கிற) சுலோகு, பார்த்திபன் ஆகிய 6 பேர் மீதான வழக்கு கும்பகோணம் தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது.

இதில் ஒவ்வொரு கட்ட விசாரணையின்போதும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சர்வதேச சிலை கடத்தல் மன்னனான சுபாஷ் சந்திர கபூரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் இறுதிகட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

இதற்காக சுபாஷ்சந்திரகபூர் உள்பட 6 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் நேற்று கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். மாலையில் நீதிபதி சண்முகப்பிரியா தீர்ப்பை வாசித்தார்.

இதில் குற்றம் நிரூபிக்கப்பட்ட சுபாஷ்சந்திரகபூர், சஞ்சீவி அசோகன், பாக்கியகுமார், மாரிச்சாமி, ஸ்ரீராம் என்கிற சுலோகு, பார்த்திபன் ஆகிய 6 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், சுபாஷ்சந்திரகபூருக்கு ரூ.4 ஆயிரமும், மீதமுள்ள 5 பேருக்கு தலா ரூ.8 ஆயிரமும் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News