தமிழ்நாடு

சம்பவம் நடந்த அடுக்குமாடி குடியிருப்பின் இரும்பு கேட்டை போலீசார் ஆய்வு செய்த காட்சி

கோடம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி பலி

Published On 2022-11-06 08:14 GMT   |   Update On 2022-11-06 08:14 GMT
  • பானுமதி மின்சார கேட்டை பூட்டுவதற்காக அதன் மீது கை வைத்தார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியது.
  • போலீசாரும், மின் ஊழியர்களும் அங்கு விரைந்து வந்தனர். மின் ஊழியர்கள் மின்சார இணைப்பை துண்டித்தனர்.

சென்னை:

சென்னை கோடம்பாக்கம் ரத்தினம்மாள் தெருவில் உள்ள கிஷன் பவுண்டேஷன் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மூர்த்தி (வயது78) வருமான வரித்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பானுமதி (76). இவர் தடய அறிவியல் துறை ஐ.ஜி.யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இந்த குடியிருப்பில் மொத்தம் 6 வீடுகள் உள்ளன. இதில் கணவன்-மனைவி இருவரும் கீழ் தளத்தில் வசித்து வந்தனர். மற்ற வீடுகள் அவர்களின் உறவினர்களுக்கு சொந்தமானவை. அவர்கள் வெளிநாடுகளில் வசிப்பதால் இங்கு வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தனர்.

மூர்த்தி-பானுமதி தம்பதிக்கு குழந்தை இல்லை. எனவே இருவரும் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்தனர். தினமும் இரவில் இந்த தம்பதியே வீட்டின் வெளிப்புற கேட்டை பூட்டுவது வழக்கம்.

நேற்று இரவு 10.30 மணியளவில் மூர்த்தியும், பானுமதியும் வீட்டில் வெளி கேட்டை பூட்டுவதற்காக சென்றனர். அப்போது மின்சார கேட்டில் உள்ள விளக்குகளுக்கு செல்லும் வயரில் மின்கசிவு ஏற்பட்டு இரும்பு கேட் மீது மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது.

அதை அறியாத பானுமதி மின்சார கேட்டை பூட்டுவதற்காக அதன் மீது கை வைத்தார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் கேட்டிலேயே தொங்கிக் கொண்டிருந்தார்.

இதனால் பதறி துடித்த மூர்த்தி, மனைவியை காப்பாற்றுவதற்காக அவரை பிடித்து இழுத்தார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. இருவரும் அலறி துடித்தபடி கேட்டிலேயே தொங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது பக்கத்து வீட்டு காவலாளி ஓடி வந்து பார்த்தார். அவர் சுதாரித்துக்கொண்டு விலகி நின்றபடி கூச்சல் போட்டு அனைவரையும் அழைத்தார். அப்போது எதிர்ட்டில் வசித்தவர் கீழே இறங்கி ஓடி வந்தார்.

அவர் முன்எச்சரிக்கையாக இரும்பு கேட்டை லேசாக தொட்டார். அப்போது ஷாக் அடித்ததால் உடனே கையை எடுத்துக்கொண்டார்.

இதுபற்றி உடனடியாக போலீசாருக்கும், மின்வாரிய ஊழியர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும், மின் ஊழியர்களும் அங்கு விரைந்து வந்தனர். மின் ஊழியர்கள் மின்சார இணைப்பை துண்டித்தனர்.

பின்னர் போலீசார் கணவன்-மனைவி இருவரையும் பார்த்தபோது அவர்கள் இருவரும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியாகி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அசோக் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இதுபற்றி அந்த குடியிருப்பில் வசிப்பவர்கள் கூறுகையில், இந்த குடியிருப்பில் நீண்ட நாட்களாகவே மின்சார பிரச்சினை இருந்து வருகிறது. பல நேரங்களில் மின்கசிவு ஏற்பட்டு வருகிறது. இதை சரிசெய்ய சொல்லி பலமுறை புகார் அளித்தோம்.

ஆனால் அவர்கள் வந்து சரிசெய்யவில்லை. பல நேரங்களில் மின் வாரியத்துக்கு போன் செய்தால் போனையும் எடுப்பதில்லை' என்று குற்றம்சாட்டினர்.

குடியிருப்பில் அடுக்குமாடி மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி பலியான சம்பவம் கோடம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News