தமிழ்நாடு செய்திகள்

இலவச வேட்டி சேலைகளை திருடி பதுக்கியதாக கிராம நிர்வாக அலுவலர் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து

Published On 2023-07-13 15:27 IST   |   Update On 2023-07-13 15:27:00 IST
  • இலவச வேட்டி, சேலை திருடு போன சம்பவம் குறித்து அவர் மீது மட்டுமே பொறுப்பு சுமத்த முடியாது.
  • இலவச வேட்டி சேலைகளுக்கான பொறுப்பு அதிகாரி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஆவார்.

மதுரை:

காரைக்குடியை சேர்ந்த அருள்ராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

சிவகங்கை மாவட்டம் கழனிவாசல் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக நான் பணிபுரிந்து வந்தேன். என்னை தூதை என்ற கிராமத்திற்கு பணியிட மாற்றம் செய்தனர். இந்த நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.

அதன் பேரில் எனது பணியிட மாற்றத்துக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இதனால் என் மீது உயர் அதிகாரிகள் காழ்ப்புணர்ச்சி கொண்டு இருந்தனர். பல்வேறு வகையில் என் மீது பழிவாங்கும் நடவடிக்கையை எடுத்து வந்தனர்.

குறிப்பாக ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அரசு வழங்கும் இலவச வேட்டி, சேலைகளை மக்களுக்கு வழங்காமல் வீட்டில் பதுக்கி வைத்ததாகவும், அதிகாரிகள் சோதனை செய்து அவற்றை பறிமுதல் செய்ததாகவும் என் மீது 2017-ம் ஆண்டு பொய்யான வழக்கு பதியப்பட்டது.

இதனை தொடர்ந்து என்னை பணி இடை நீக்கம் செய்தனர். இது முற்றிலும் பழிவாங்கும் நடவடிக்கையாகும். இந்த வழக்கில் என் மீது பதியப்பட்ட வழக்கு மற்றும் குற்றப்பத்திரிக் கையை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சத்திகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

கிராம நிர்வாக அலுவலரான மனுதாரர், இலவச வேட்டி, சேலைகளை திருடி பதுக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் மனுதாரர் தரப்பு வாதம் கவனிக்கத்தக்கது. அதாவது, மனுதாரர் கிராம நிர்வாக அலுவலர் மட்டுமே. இலவச வேட்டி, சேலை திருடு போன சம்பவம் குறித்து அவர் மீது மட்டுமே பொறுப்பு சுமத்த முடியாது.

இலவச வேட்டி சேலைகளுக்கான பொறுப்பு அதிகாரி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஆவார். எனவே அரசின் இலவச வேட்டி, சேலைகளை மோசடி செய்ததாக மனுதாரர் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

Tags:    

Similar News