தமிழ்நாடு செய்திகள்
மரம் விழுந்ததால் அணி வகுத்து நின்ற வாகனங்கள்

தொடர் மழையால் தமிழக-கர்நாடக எல்லையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

Published On 2022-07-19 10:08 IST   |   Update On 2022-07-19 10:08:00 IST
  • தமிழக-கர்நாடக எல்லையான புழிஞ்சூர் அருகே சாலை ஓரத்தில் இருந்த தைல மரம் ரோட்டில் முறிந்து விழுந்தது.
  • மரத்தை அகற்ற கர்நாடக நெடுஞ்சாலை துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் சாலை தமிழக-கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய சாலையாகும். இந்த சாலையின் வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த நிலையில் ஆசனூர் புழிஞ்சூர், தாளவாடி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று தொடர்ந்து சாரல் மழை பெய்தது. நேற்று நள்ளிரவு பெய்த மழையால் தமிழக-கர்நாடகா எல்லையான புழிஞ்சூர் அருகே சாலை ஓரத்தில் இருந்த தைல மரம் ரோட்டில் முறிந்து விழுந்தது.

இரவு நேர போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதால் வாகனங்கள் ஏதும் செல்லவில்லை. மரத்தை அகற்ற கர்நாடக நெடுஞ்சாலை துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வழக்கம் போல் இன்று காலை 6 மணி அளவில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. ஆனால் சாலையில் மரம் விழுந்து இருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வாகனங்கள் அனைத்தும் இருபுறமும் பல கிலோமீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. பின்னர் காலை 7 மணி அளவில் சம்பவ இடத்துக்கு வந்த கர்நாடக நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் வனத்துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர்.

பின்னர் போக்குவரத்து சீரானது. இதனால் தமிழக- கர்நாடக இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News