தமிழ்நாடு

தூத்துக்குடியில் மீண்டும் வெளுத்து வாங்கும் கனமழை

Published On 2024-01-09 05:14 GMT   |   Update On 2024-01-09 05:14 GMT
  • ஏரலிலும் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது.
  • கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தூத்துக்குடி:

தென் மாவட்டங்களில் இன்று முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி இன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் தண்ணீர் பாய்ந்து ஓடியது. இன்று காலை முதலே வானம் மூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் காலை 8.30 மணி முதல் சாரலாக தொடங்கிய மழை பின்னர் பலத்த மழையாக பெய்தது. இதனால் பணிக்கும், அலுவலகங்களுக்கும் புறப்பட்டு சென்றவர்கள் அவதி அடைந்தனர். ஏரலிலும் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது.

உடன்குடி மற்றும் சுற்றுப்புறபகுதியான பரமன்குறிச்சி, குலசேகரன்பட்டினம், மணப்பாடு, மாதவன்குறிச்சி, கொட்டங்காடு, செட்டியாபத்து. லட்சுமிபுரம், மருதூர்கரை, பிச்சிவிளை, வட்டன்விளை, சீர்காட்சி ஆகிய பகுதிகளில் இன்று காலை முதல் மழை விட்டு விட்டு தொடர்ந்து பெய்தது.

இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் ஆகியோர் பயணம் செய்ய கடும் சிரமப்பட்டனர். இதனால் முக்கியமான பஜார் சாலைகள், தெருக்களில் தண்ணீர் தேங்கியது.

இதேபோல் மெஞ்ஞானபுரம், செம்மறிகுளம், வள்ளியம்மாள்புரம், நங்கைமொழி, மாநாடு மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இன்று காலை 9 மணியளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமார் ½ மணி நேரம் பெய்த கன மழையால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.


மெஞ்ஞானபுரம் அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள விஜிகுமரன்நகர் பகுதியில் தேங்கிய தண்ணீரை 3 மின் மோட்டார் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதே போல் ஷாலோம் நகரில வீடுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இந்த தண்ணீரை மின் மோட்டார் மூலம் அகற்றும் பணியை பஞ்சாயத்து தலைவர் கிருபா ராஜபிரபு செய்து வருகிறார். கடந்த மாதம் பெய்த கனமழையால் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து 25 நாட்கள் ஆகியும் சில இடங்களில் இயல்பு நிலை திரும்பாமல் சுமார் 100-க்கு மேற்பட்டோர் நிவாரன முகாம்களிலும், சிலர் தங்கள் உறவினர்கள் வீடுகளிலும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று திடீரென பெய்த கன மழையால் குடியிருப்பு பகுதிகளில் மேலும் கூடுதலாக தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த மழை, வெள்ளத்தால் பெரும் பாதிப்பு அடைந்த நிலையில் இன்று கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 

Tags:    

Similar News