தமிழ்நாடு செய்திகள்

கடும் பனிமூட்டம் காரணமாக சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்ற காட்சி.

நீலகிரியில் கடும் பனிமூட்டம்- பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Published On 2022-12-27 09:27 IST   |   Update On 2022-12-27 16:05:00 IST
  • ஊட்டி, குன்னூா், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே கடும் பனி மூட்டம் நிலவுகிறது.
  • கடும் குளிரின் காரணமாக தேயிலை மற்றும் காய்கறி தோட்ட பணிக்கு செல்பவா்கள் அவதிக்குள்ளாகினா்.

அரவேணு:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடும் உறைபனியும், குளிரும் நிலவி வந்தது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டனர்.

இந்த நிலையில் ஒரு வாரத்திற்கும் மேலாக நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மிதமான மழை பெய்து வந்தது. இதனால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு தற்போது பனிமூட்டமும், குளிர்ந்த காலநிலையும் நிலவுகிறது.

ஊட்டி, குன்னூா், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே கடும் பனி மூட்டம் நிலவுகிறது.

பனிமூட்டத்துடன் சாரல் மழையும் பெய்வதால் குளிர் மக்களை வாட்டி வதைக்கிறது. அதிகாலையில் தொடங்கும் கடும் பனிமூட்டமானது காலை 11 மணி வரை நிலவுகிறது. இதன் காரணமாக காலை நேரமே இரவு போன்றே காட்சியளிக்கிறது.

இன்று காலை நேரத்திலேயே கடும் மேகமூட்டம் ஏற்ப்பட்டு சாலைகள் மற்றும் குடியிருப்புகளில் மேகம் சூழ்ந்து சாலையே தெரியாத அளவுக்கு காணப்பட்டது.

கடும் பனி மூட்டத்தால் எதிரே வரும் வாகனங்களும் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் தங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே வாகனத்தை இயக்கி செல்கிறார்கள்.

கடும் குளிரின் காரணமாக தேயிலை மற்றும் காய்கறி தோட்ட பணிக்கு செல்பவா்கள் அவதிக்குள்ளாகினா். பெரும்பாலான தோட்டங்களில் தொழிலாளா்கள் வேலைக்கு செல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டன.

தொடர்ந்து மேகமூட்டம் சூழ்ந்த காலநிலை நிலவி வருவதால் கடும் குளிர் நிலவி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News