தமிழ்நாடு

ஹாமூன் புயல் எதிரொலி: பாம்பன் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

Published On 2023-10-24 03:27 GMT   |   Update On 2023-10-24 04:39 GMT
  • தனுஷ்கோடியில் வழக்கமாக கடல் சீற்றத்துடன் காணப்படும்.
  • சுற்றுலா பயணிகளை கண்காணிக்க தனுஷ்கோடியில் கடலோர காவல் படையினர் ரோந்து சுற்றி வருகின்றனர்.

ராமேசுவரம்:

மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலு பெற்று புயலாக மாறி உள்ளது. ஹாமூன் என பெயரிடப்பட்ட இந்த புயல் நாளை 25-ந்தேதி அதிகாலை வங்காளதேசத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலின் தாக்கம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியை ஒட்டியுள்ள கடற்கரை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக ராமநாதபுரம் ராமேசுவரத்தில் புயல் எதிரொலியால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. எனவே மீனவர்கள் நேற்று முன்தினம் முதல் கடலுக்கு செல்லவில்லை. நாட்டு படகு மீனவர்கள் மட்டும் கடலுக்கு சென்று வந்தனர்.

இந்த நிலையில் நேற்று ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தைவிட கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. மேலும் பலத்த சூறவாளி காற்றும் வீசியது. இதனால் மீனவர்கள் துறைமுகங்களில் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர்.

ஹாமூன் புயல் எதிரொலியாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்பதை எச்சரிக்கை விடுக்கும் வகையில் பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று முன்தினம் ஏற்றப்பட்டது. புயல் மேலும் வலு பெற்றதையடுத்து இன்று அதிகாலை பாம்பன் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தனுஷ்கோடியில் வழக்கமாக கடல் சீற்றத்துடன் காணப்படும். தற்போது புயல் தாக்கம் காரணமாக வழக்கத்தைவிட கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் கடற்பகுதிக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சூறாவளி காற்றால் சாலைகள் முழுவதும் மணல் மூடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளை கண்காணிக்க தனுஷ்கோடியில் கடலோர காவல் படையினர் ரோந்து சுற்றி வருகின்றனர்.

Tags:    

Similar News