குஜராத் சட்டசபை தேர்தல்: ஆன்-லைன் சூதாட்டத்தில் ரூ.50 ஆயிரம் கோடி புழக்கம்
- காங்கிரஸ் 15 முதல் 30 இடங்களையும் ஆம் ஆத்மி கட்சி 10 முதல் 20 இடங்களையும் பெறலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
- காங்கிரஸ் கட்சிக்கு குஜராத்தில் வலுவான தலைமை இல்லாததால் அக்கட்சியின் வாக்குகள் பிரிந்து ஆம்ஆத்மிக்கு பதிவாகலாம் என்று கூறப்படுகிறது.
சென்னை:
குஜராத் மாநில சட்டசபைக்கு வருகிற டிசம்பர் 1 மற்றும் 5-ந்தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அங்கு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் குஜராத் தேர்தலை வைத்து ஆன்லைன் சூதாட்டம் களை கட்டி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தில் கள்ளச்சந்தையில் ரூ.50 ஆயிரம் கோடி வரை பணப்புழக்கத்தை ஏற்படுத்த சூதாட்ட தரகர்கள் திட்டமிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
தேர்தலில் பா.ஜனதா 120 இடங்களை கைப்பற்றி மெகா வெற்றி பெறும் என்று சூதாட்ட தரகர்கள் கணித்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் 15 முதல் 30 இடங்களையும் ஆம் ஆத்மி கட்சி 10 முதல் 20 இடங்களையும் பெறலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு குஜராத்தில் வலுவான தலைமை இல்லாததால் அக்கட்சியின் வாக்குகள் பிரிந்து ஆம்ஆத்மிக்கு பதிவாகலாம் என்று கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் பா.ஜனதா 99 இடங்களையும், காங்கிரஸ் 77 இடங்களையும் கைப்பற்றின என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலை வைத்து நடத்தப்படும் இந்த சூதாட்டம் ஜனநாயகத்தையே கேள்விக் குறியாக்குவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான், இங்கிலாந்து மோதும் போட்டி தொடர்பான சூதாட்டமும் களைகட்டி உள்ளது.
இந்த சூதாட்டங்கள் ஆன்லைனில் நடப்பதால் அவற்றை முழுமையாக உடனடியாக தடுப்பது மிகவும் கடினமானது என்று போலீசார் தெரிவித்தனர்.