தமிழ்நாடு

தூத்துக்குடி விமான நிலையத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த காட்சி.


மசோதா வந்த உடனேயே கவர்னர் கையெழுத்து போட்டு தான் ஆக வேண்டும் என்று கிடையாது- கவர்னர் தமிழிசை

Published On 2022-12-04 07:17 GMT   |   Update On 2022-12-04 07:19 GMT
  • வருகிற 9-ந் தேதி அனைத்து மாநில கவர்னர்கள் மற்றும் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.
  • ஆளுனர் என்றாலே எந்தவித சந்தேகமும் படாமல் உடனே கையெழுத்து போட வேண்டும் என்று இல்லை.

தூத்துக்குடி:

தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜி-20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்குகிறது. இது நமக்கெல்லாம் பெருமைமிக்க நிகழ்வு. இதற்கான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

வருகிற 9-ந் தேதி அனைத்து மாநில கவர்னர்கள் மற்றும் முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.

விவேகானந்தர் உலகத்தின் குருவாக பாரதம் இருக்க வேண்டும் என்று நினைத்தாரோ, அதே போல இன்று நாம் ஒரு முன்னேற்றமான பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். அதற்காக நாம் பிரதமருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

அதுமட்டுமல்ல, தற்போது மூக்கில் சொட்டு மருந்து தடுப்பூசி தமிழகத்தை சேர்ந்த பயோடெக் நிறுவனம் சார்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் தற்போதும் பொது முடக்கம் உள்ளது. கொரோனா தொற்றுகள் அதிகரித்து வருகிறது. இவை அனைத்தில் இருந்தும் நாம் தப்பித்தோம் தடுப்பூசி தான் காரணம். இதற்காக அதற்கு ஏற்பாடு செய்த பிரதமர் மோடி மற்றும் மாநில அரசுகள், ஏற்றுக்கொண்ட மக்களால் தான் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக ஆளுனரை திரும்ப பெற வேண்டும் என தி.மு.க. எம்.பி.க்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதுபற்றி கவர்னராக உங்கள் கருத்து என்ன? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழிசை சவுந்தரராஜன் பதில் அளிக்கையில், அரசியல் ரீதியாக 'ஆன்லைன் ரம்மி' சட்ட மசோதாவை ஏன் நிறைவேற்ற முடியவில்லை என்று ஆளுனர் சில தகவல்களை சொல்லி இருக்கிறார்.

ஆளுனர் என்றாலே எந்தவித சந்தேகமும் படாமல் உடனே கையெழுத்து போட வேண்டும் என்று இல்லை. அவர்கள் அமைச்சரை அழைத்து சில விளக்கங்களை கேட்டிருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். விளக்கம் கிடைத்ததும் அவர் அதற்கான முடிவு எடுக்கலாம்.

ஒரு ஆளுனருக்கு மசோதா வந்த உடனேயே கையெழுத்து போட்டு தான் ஆக வேண்டும் என்று கிடையாது. அதில் சில சந்தேகங்கள் இருந்தால், அவர்கள் அதற்கான ஆலோசனை கேட்பதற்கு நேரம் எடுத்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News