தமிழ்நாடு

கோகுல்ராஜ் கொலை வழக்கு- சுவாதி வீட்டுக்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு

Published On 2022-11-26 07:22 GMT   |   Update On 2022-11-26 07:41 GMT
  • சுவாதி பயம் இல்லாமல் கோர்ட்டுக்கு வருவது உறுதி செய்து, அவரை நீதிமன்றத்தில் விசாரணை அதிகாரி ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
  • கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ள சுவாதிக்கும், அவரது குடும்பத்தாருக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்:

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் என்ஜினியரிங் பட்டதாரி கோகுல்ராஜ். இவர் தன்னுடன் படித்த நாமக்கல்லை சேர்ந்த சுவாதியை காதலித்தார். 2 பேரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் இந்த காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.

இதற்கிடையே கடந்த 2015-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் ரெயில் தண்டவாளத்தில் கோகுல் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கார் டிரைவர் அருண்குமார் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீதான வழக்கு மதுரை தாழ்த்தப்பட்டோர் நல கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. யுவராஜ் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர். தண்டனையை ரத்து செய்யக்கோரி யுவராஜ் உட்பட 10 பேர் ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்தனர். 5 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கோகுல்ராஜ் தாய் சித்ரா மற்றும் சி.பி.சி.ஐ.டி தரப்பிலும் ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் நீதிபதிகள் ரமேஷ் ஆனந்த், வெங்கடேசன் ஆகியோர் கொண்ட பெஞ்சில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதிகள் நீதித்துறையின் மனசாட்சியை திருப்திப்படுத்தும் வகையில் சுவாதியை மீண்டும் சாட்சியாக விசாரிக்க விரும்புகிறது. எனவே சுவாதி பயம் இல்லாமல் கோர்ட்டுக்கு வருவது உறுதி செய்து, அவரை நீதிமன்றத்தில் விசாரணை அதிகாரி ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

அதன்படி, போலீஸ் பாதுகாப்புடன் சுவாதி நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தினார். அப்போது நீதிபதிகள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். இதற்கிடையே கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ள சுவாதிக்கும், அவரது குடும்பத்தாருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதையடுத்து நாமக்கல் மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கூடுதல் போலீசார் அங்கு குவிக்கப்பட்டு தொடர்ந்து பாதுகாப்பு பணியிலும், 24 மணி நேர கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.




Tags:    

Similar News