தமிழ்நாடு

ஊட்டி வர்க்கிக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம்- உற்பத்தியாளர்கள் பெரும் மகிழ்ச்சி

Update: 2023-03-24 05:25 GMT
  • புவிசார் குறியீடு ஊட்டி வர்க்கிக்கு கிடைப்பது ஊட்டியின் பாரம்பரியத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரமாக கருதப்படுகிறது.
  • ஊட்டி வர்க்கியுடன் சேர்த்து அதே நாளில் மணப்பாறை முறுக்குக்கும் புவிசார் குறியீடு கிடைக்க உள்ளது.

ஊட்டி:

மலைகளின் அரசியான நீலகிரி சுற்றுலா தலங்களுக்கு மட்டும் பிரபலமானது அல்ல. நீலகிரியில் கிடைக்கும் சுவையான, மொறு மொறுப்பான வர்க்கிக்கும் பிரபலமானது தான்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் விருப்பமான ஒரு நொறுக்கு தீனியாகவே இது இருந்து வருகிறது.

நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவருமே இதனை வாங்காமல் மலையை விட்டு இறங்குவது கிடையாது. அந்தளவுக்கு இந்த வர்க்கி அனைவர் மத்தியிலும் பிரபலம் அடைந்துள்ளது.

இப்படி பிரபலமான இந்த வர்க்கி எப்படி உருவானது என்பதை பார்க்கலாம். ஆங்கிலேயேர்கள் ஆட்சியில் அவர்கள், அதிகமான பேக்கிங் பொருட்களை தயாரித்து உட்கொண்டனர். அப்படி அவர்கள் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியதான் குக்கிஸ் (பிஸ்கெட்). அது அவர்களின் பிரதான நொறுக்குத்தீனியாகவே இருந்தது.

காலையில் நீலகிரியின் மணம் கமழும் தேநீரோடு, சில, பல குக்கிகளை விழுங்குவது, அவர்களது வழக்கம். அப்போது அவர்களிடம் பணியாற்றிய சில சமையல்காரர்கள், அந்த பிஸ்கட்டை அடிப்படையாக வைத்து புதுச்சுவையில் ஒரு வகை நொறுக்குத்தீனியை உருவாக்கினர்.

அந்த நொறுக்குத்தீனி தான் வர்க்கி. மொறுமொறுவென்று இருந்த அதன் புதுச்சுவை ஆங்கிலேயர்களுக்கு பிடித்து போக தற்போது அது நீலகிரியின் அடையாளமாகவே மாறி விட்டது.

குக்கிஸ் பொருளுக்கு மாற்றாக, 'வற வற' என, இருந்ததால், அந்த தின்பண்டம் 'வறக்கிஸ்' என முதலில் அழைக்கப்பட்டது. பின்பு வர்க்கி என பெயர் மருவியது. ஆங்கிலேயர் காலத்தில், நெய் கலந்த மாவு பொருளை, நெய்யில் வறுத்து எடுத்ததால் இதற்கு வர்க்கி' என்ற பெயர் வந்தது என மற்றொரு தகவலும் உண்டு.

நீலகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் வர்க்கிகள், தமிழகம் மட்டுமின்றி கேரள, கர்நாடக மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. அங்குள்ள பேக்கரிகள், டீ கடைகள் மற்றும் பெட்டிக்கடைகளில் விற்கப்படுகின்றன.

உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற இந்த ஊட்டி வர்க்கிக்கு புவிசார் குறியீடு பெற அதன் உற்பத்தியாளர்கள் கடும் முயற்சி மேற்கொண்டு வந்தனர். தற்போது அவர்களின் முயற்சியின் பலனாக ஊட்டி வர்க்கிக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

பல கட்ட ஆய்வுக்கு பின் கடந்த ஆண்டு நவம்பர் 30-ந் தேதி புவிசார் குறியீடு இதழில் ஊட்டி வர்க்கிக்கு, புவிசார் குறியீடுக்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 4 மாதங்களுக்குள் அதாவது மார்ச் 30-ந் தேதிக்குள் இதற்கு ஆட்சேபம் எழுந்தால் அந்த விண்ணப்பம் மறுபரிசீலனைக்கு உள்ளாகும்.

இல்லாவிடில் அந்த பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு விடும். அதன்படி வருகிற 31-ந் தேதியில் இருந்து ஊட்டி வர்க்கிக்கு புவிசார் குறியீடு என்கிற மகத்தான அங்கீகாரம் கிடைக்க உள்ளது.

புவிசார் குறியீடு ஊட்டி வர்க்கிக்கு கிடைப்பது ஊட்டியின் பாரம்பரியத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரமாக கருதப்படுகிறது. மேலும் ஊட்டியை தவிர வேறு எங்கு தயாரிக்கும் வர்க்கியையும் ஊட்டி வர்க்கி என்ற பெயரில் விற்பனை செய்வதை, சட்டப்பூர்வமாக தடுக்க முடியும்.

இதுகுறித்து வர்க்கி உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் முகம்மது பரூக் கூறும் போது, ஊட்டி வர்க்கிக்கு கிடைக்கும் இந்த அங்கீகாரம் எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது. இதனை தரமானதாக தயாரிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வை இந்த அங்கீகாரம் கொடுத்துள்ளது. ஏற்கனவே குறியீடு பெற்றுள்ள ஊட்டி டீயுடன் வர்க்கியும் சேர்வது இணையற்ற சுவையாக அமைய உள்ளது என்றார்.

இதேபோல் ஊட்டி வர்க்கியுடன் சேர்த்து அதே நாளில் மணப்பாறை முறுக்குக்கும் புவிசார் குறியீடு கிடைக்க உள்ளது. இது தமிழகத்தின் பாரம்பரிய உணவு பொருளுக்கான பெருமையை உலகறிய செய்யும். இவற்றுடன் மண்பாண்டத்துக்கு பெயர் பெற்ற மானாமதுரையில் தயாரிக்கப்படும் இசைக்கருவியான கடம், கன்னியாகுமரி மாவட்டத்தில் தயாராகும் கைவினை பொருளான மயிலாடி கல் சிற்பங்களுக்கும் புவிசார் குறியீடு என்ற பெருமை கிடைக்க உள்ளது.

Tags:    

Similar News