தமிழ்நாடு

பண்ணாரி சோதனை சாவடியில் லஞ்சம் தர மறுத்ததால் டிரைவரை தாக்கிய வனவர்- காவலர் சஸ்பெண்ட்

Published On 2023-07-25 07:07 GMT   |   Update On 2023-07-25 07:07 GMT
  • சத்தியமங்கலம் வனத்துறை அதிகாரிகள் இது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
  • தீபக்குமார், மூர்த்தி 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து வனத்துறை அதிகாரிகள் அதிரடி உத்தரவிட்டனர்.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரியில் சத்தியமங்கலம் வனத்துறைக்கு சொந்தமான சோதனை சாவடி உள்ளது. வனப்பகுதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு வன சோதனை சாவடியில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சோதனை சாவடி வழியாக வாகனத்தில் சென்ற கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த லாரி டிரைவரிடம் சோதனை சாவடி பணியில் இருந்த வனவர் தீபக்குமார் மற்றும் வேட்டை தடுப்பு காவலர் மூர்த்தி ஆகிய 2 பேரும் சேர்ந்து லஞ்சம் கேட்டு அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். லஞ்சம் தர மறுத்ததால் டிரைவரை அவர்கள் சரமாரியாக தாக்கினர்.

இது குறித்த வீடியோ வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சத்தியமங்கலம் வனத்துறை அதிகாரிகள் இது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

அதில் டிரைவரை வனவர் தீபக்குமார், வேட்டை தடுப்பு காவலர் மூர்த்தி ஆகியோர் ஆகியோர் தாக்கியது உறுதியானது. இதனையடுத்து தீபக்குமார், மூர்த்தி 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து வனத்துறை அதிகாரிகள் அதிரடி உத்தரவிட்டனர்.

இந்நிலையில் வனத்துறையினர் லாரி ஓட்டுனரை தாக்கிய காட்சியை வீடியோ எடுத்த மற்றொரு லாரி ஓட்டுனரை வனத்துறையினர் மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது.

Tags:    

Similar News