தமிழ்நாடு செய்திகள்

கனமழையால் காட்டாற்று வெள்ளம்: சதுரகிரியில் தவித்த 3 ஆயிரம் பக்தர்கள்

Published On 2022-07-29 11:46 IST   |   Update On 2022-07-29 11:46:00 IST
  • மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது.
  • சதுரகிரி மலைப்பகுதிகளில் திடீர் கனமழை பெய்தது.

ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு கடந்த 25-ந் தேதி முதல் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சென்று தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர்.

நேற்று ஆடி அமாவாசை நாளையொட்டி அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரியில் குவிந்தனர். காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை தொடர்ந்து பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால் மலை பாதைகள், சுந்தர மகாலிங்கம் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

நேற்று முன்தினம் இரவு மழை பெய்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலைப்பாைதகளில் தீயணைப்பு வனத்துறையினர், போலீசார் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நேற்று மாலை 3 மணியுடன் மலையேற அனுமதி மறுக்கப்பட்டது. ஆனாலும் சாமி தரிசனம் செய்ய சென்றவர்கள் தொடர்ந்து அடிவாரத்துக்கு வந்து கொண்டிருந்தனர். இதே போல் வருசநாட்டு மலைப்பகுதியிலும் ஏராளமான பக்தர்கள் பயன்படுத்தினர்.

இந்த நிலையில் நேற்று இரவு சதுரகிரி மலைப்பகுதிகளில் திடீர் கனமழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை நீடித்தது. இதனால் அடிவாரத்திற்கு இறங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் ஒதுங்கக்கூட இடமில்லாமல் தவித்தனர். தொடர் மழை காரணமாக அங்குள்ள மாங்கனி ஓடை, சங்கிலிப்பாறை, பிலாவடி கருப்பசாமி கோவில் ஓடைகளில் திடீரென காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பக்தர்கள் அந்தப்பகுதிகளை கடக்க முடியாமல் அங்கேயே தடுத்து நிறுத்தப்படட்னர். தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்ததால் பலமணி நேரம் ஒரே இடத்தில் பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

நள்ளிரவு நேரத்தில் ஓடைகளில் தண்ணீர் சற்று குறைந்தவுடன் வனத்துறை, தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி பக்தர்களை அங்கிருந்து பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். மழை பெய்ததால் பல இடங்களில் சேறும், சகதியுமாக காணப்பட்டது.

கனமழை பெய்ததால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் இருந்து கீழே இறங்க அனுமதி மறுக்கப்பட்டது. சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திடீர் கனமழையால் மலைப்பாதைகளில் சிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் கடும் அவதியடைந்தனர்.

இன்று காலையும் சதுரகிரி செல்ல தாணிப்பாறை அடிவாரத்தில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். ஆனால் மழை பெய்வதற்கான அறிகுறிகள் இருந்ததால் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. காலை 9 மணிக்கு பிறகு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

Similar News