தமிழ்நாடு

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு- கிராம மக்களுக்கு எச்சரிக்கை

Published On 2022-12-10 07:43 GMT   |   Update On 2022-12-10 07:43 GMT
  • தமிழக ஆந்திர எல்லையில் அமைந்துள்ள பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் தற்போது நீர் வந்து கொண்டிருக்கிறது.
  • ஆந்திர மாநிலம் அம்மம்பள்ளி அணையில் இருந்து நேற்று இரவு 170 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

திருவள்ளூர்:

வங்கக்கடலில் உருவான மாண்டஸ்' புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதனால் ஆந்திராவிலும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், கிருஷ்ணாபுரம் பகுதியில் அம்மம்பள்ளி அணை உள்ளது. 33 அடி ஆழம் கொண்ட இந்த அணை கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் நிரம்பியது.

இதனையடுத்து ஆந்திர மாநில அரசு கூடுதல் நீரை வெளியேற்றுவதற்காக 170 கன அடி உபரி நீரை இரண்டு மதகுகள் வழியாக திறந்துவிட்டது.

தமிழக ஆந்திர எல்லையில் அமைந்துள்ள பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் தற்போது நீர் வந்து கொண்டிருக்கிறது. எனவே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இருக்கும் தரைப்பாலங்களைக் கடக்கும்போது பாதுகாப்பாக கடக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொசஸ்தலை ஆற்றில் வந்து கொண்டிருக்கும் நீரானது பூண்டி நீர் தேக்கத்தை விரைவில் வந்தடையும். இதனால் திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக பள்ளிப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள 20 கிராமங்களை சேர்ந்த கரையோர மக்களுக்கு வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

ஆந்திர மாநிலம் அம்மம்பள்ளி அணையில் இருந்து நேற்று இரவு 170 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

பள்ளிப்பட்டு சுற்றுப்புற பகுதியான வெளியகரம், நெடியம், சாமந்த வாடா தரைப்பா லத்துக்கு மேல் தண்ணீர் செல்வதால் பாலத்தை கடக்க முயல வேண்டாம். மேலும் பாதுகாப்பு பணியில் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் பொதுப் பணித்துறை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News