தமிழ்நாடு

3-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை: ராமேசுவரத்தில் ரூ.5 கோடி வர்த்தகம் பாதிப்பு

Published On 2023-07-06 04:29 GMT   |   Update On 2023-07-06 04:29 GMT
  • ராமேசுவரம் மீனவர்கள் சூறாவளி காற்று, கடல் கொந்தளிப்பு போன்ற காரணங்களால் கடந்த 2 நாட்களாக கடலுக்கு செல்லவில்லை.
  • ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இன்றும் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

ராமேசுவரம்:

தமிழகத்தை ஒட்டியுள்ள தென் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக உள் மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரம் மீனவர்கள் சூறாவளி காற்று, கடல் கொந்தளிப்பு போன்ற காரணங்களால் கடந்த 2 நாட்களாக கடலுக்கு செல்லவில்லை. இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட விசைப்படகுகள், நாட்டுப் படைகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

3-வது நாளாக இன்றும் ராமேசுவரத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி ஆகிய கடல் பகுதிகளில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வரை கடல் காற்று வீசி வருகிறது. தனுஷ்கோடியில் வழக்கத்தை விட கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. அரிச்சல் முனை, முகுந்தராயர் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் ராட்சத அலைகள் எழும்பின.

இதன் காரணமாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இன்றும் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என 15 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக மீன்பிடித்தொழில் தடைபட்டுள்ளதால் ரூ.5 கோடி வரை மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

தனுஷ்கோடியில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் சாலைகளை மணல்கள் மூடின. இதனால் போக்குவரத்து தடைப்பட்டது. தனுஷ்கோடியில் இறங்கி குளிக்க வேண்டாம் என சுற்றுலா பயணிகளை கடலோர காவல் படையினர் எச்சரித்துள்ளனர். மேலும் அவர்கள் 24 மணி நேரமும் கடலோரப் பகுதிகளில் ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து ராமேசுவரம் மீனவர்கள் கூறுகையில், மீன்களின் இனப்பெருக்கத்தை முன்னிட்டு கடந்த 3 மாத காலமாக மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடை முடிந்து தற்போது தான் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகிறோம். இதனிடையே இலங்கை கடற்படை தொல்லையால் முழுமை யாக மீன்பிடி தொழிலில் ஈடுபட முடிவதில்லை. தற்போது இயற்கையும் எங்களை வஞ்சித்துள்ளது. இதனால் வருமானம் இன்றி குடும்பம் நடத்தவே கஷ்டமாக உள்ளது. வானிலை மாற்றம், புயல் போன்ற காலங்களில் கடலுக்கு செல்லாதபோது மீனவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கினால் உதவியாக இருக்கும் என்றனர்.

Tags:    

Similar News