தமிழ்நாடு செய்திகள்

தங்கச்சிமடத்தில் மீனவர்கள் 'திடீர்' உண்ணாவிரதம்- சிறை பிடித்துள்ள படகுகளை விடுவிக்க கோரிக்கை

Published On 2023-04-28 12:02 IST   |   Update On 2023-04-28 12:02:00 IST
  • 70-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளை இலங்கை கடற்படை சிறை பிடித்து வைத்துள்ளது.
  • போதிய பாதுகாப்பின்றி வைக்கப்பட்டுள்ளதால் அவைகள் சேதம் அடைந்து வருகின்றன.

ராமேசுவரம்:

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் பாக் ஜலசந்தி, கச்சத்தீவு ஆகிய கடல் பகுதிகளில் மீன் பிடிக்கும் போது எல்லை தாண்டி வந்ததாக அவர்களை இலங்கை கடற்படையினர் விசைப்படகுகளுடன் சிறை பிடிப்பதும், பல நேரங்களில் தாக்கி விரட்டி அடிப்பதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.

இவ்வாறு எல்லை தாண்டி வந்ததாக இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களின் 70-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளை இலங்கை கடற்படை சிறை பிடித்து வைத்துள்ளது. இதனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ள படகுகள் போதிய பாதுகாப்பின்றி வைக்கப்பட்டுள்ளதால் அவைகள் சேதம் அடைந்து வருகின்றன.

இந்நிலையில் இன்று ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடம் வலசை பஸ் நிலையம் முன்பு மீனவர்கள் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

ராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்க செயலாளர் ஜேசு ராஜா, மீனவர் சங்கத் தலைவர்கள் தேவதாஸ், எமரிட், சகாயராஜ் ஆகியோர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை உடனே விடுவிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய கடல் எல்லையை ஒட்டியுள்ள கச்சத்தீவு அருகே அச்சமின்றி மீன் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன்பிடி தடைக்கால நிவாரணமான ரூ. 6 ஆயிரம் உதவித் தொகையை அரசு உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.இதில் வெளி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News