கோர்ட்டு தீர்ப்புக்கு பயந்து பிளம்பர் விஷம் குடித்து தற்கொலை
- வழக்கின் தீர்ப்பு தனக்கு எதிராக வந்து விடுமோ என சில நாட்களாகவே ராஜூ பயத்தில் இருந்து வந்தார்.
- ராஜூ இறந்த தகவலை அடுத்து நேற்று வழங்கப்பட இருந்த தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோவை:
கோவை போத்தனூர் செட்டி பாளையத்தை சேர்ந்தவர் ராஜூ(43). பிளம்பர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசார் இவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
பின்னர் அவர் ஜாமீனில் வெளியில் வந்தார். தொடர்ந்து அவர் தான் முன்பு குடியிருந்த பகுதிக்கு செல்லாமல், போத்தனூரிலேயே வீடு எடுத்து தங்கி தனியாக வசித்து வந்தார்.
இந்த வழக்கு கோவை கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணைக்கு வந்த போதெல்லாம் ராஜூ கோர்ட்டில் ஆஜராகி வந்தார்.
இந்த நிலையில் வழக்கின் விசாரணை அனைத்தும் முடிந்து வருகிற 27-ந் தேதி (நேற்று) தீர்ப்பு அளிக்கப்படுவதாக கோர்ட்டு அறிவித்து இருந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பு தனக்கு எதிராக வந்து விடுமோ என சில நாட்களாகவே ராஜூ பயத்தில் இருந்து வந்தார். அக்கம்பக்கம் உள்ளவர்கள் யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருந்து வந்தார்.
இந்த நிலையில் வழக்கு தனக்கு எதிராக வந்துவிடுமோ என்ற பயத்தில் இருந்த ராஜூ, வீட்டில் இருந்த சாணி பவுடரை எடுத்து கரைத்து குடித்தார்.
இதற்கிடையே அவரது சகோதரர் ரஞ்சித் என்பவர், ராஜூவை பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்தார். அப்போது ராஜூ வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சியான அவர், ராஜூவை மீட்டு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராஜூ வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போத்தனூர் போலீசார் விரைந்து வந்து ராஜூவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜூ இறந்த தகவலை அடுத்து நேற்று வழங்கப்பட இருந்த தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போக்சோ வழக்கில் தனக்கு எதிராக தீர்ப்பு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.