தமிழ்நாடு செய்திகள்

சேந்தமங்கலம் அருகே ஓட்டி பழகியபோது காருடன் கிணற்றுக்குள் பாய்ந்து விவசாயி பலி

Published On 2023-10-04 12:54 IST   |   Update On 2023-10-04 12:54:00 IST
  • காரை ஓட்டி பழகிவிட்டு மீண்டும் தோட்டத்தில் காரை நிறுத்த ராஜேந்திரன் முயன்றுள்ளார்.
  • ராஜேந்திரன் நீச்சல் தெரியாததால் காருடன் கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

சேந்தமங்கலம்:

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த பெரியகுளம் பஞ்சாயத்து திருமலைகிரி பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (50). இவருக்கு சொந்தமாக விவசாய தோட்டம் உள்ளது.

சண்முகத்தின் தோட்டத்தை கொல்லிமலை வளப்பூர்நாடு பஞ்சாயத்து புளியம்பட்டியை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் (50) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு கலைமணி என்ற மனைவியும், கோபி (23) என்ற மகன், மாலனி என்ற மகளும் உள்ளனர்.

ராஜேந்திரன் கார் ஓட்ட ஆசைப்பட்டதால் தனது மகன் கோபியிடம் கார் ஓட்டி பழகி வந்தார். நேற்று மாலை தனது உறவினரின் காரை ஓட்டி கற்றுக்கொள்ள மகன் கோபியுடன் ராஜேந்திரன் சென்றார்.

காரை ஓட்டி பழகிவிட்டு மீண்டும் தோட்டத்தில் காரை நிறுத்த ராஜேந்திரன் முயன்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரில் இருந்த 50 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றுக்குள் தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு பாய்ந்தது.

சுதாரித்துக் கொண்ட கோபி கார் கண்ணாடியை உடைத்து வெளியே வந்து உயிர் தப்பினார். ராஜேந்திரன் நீச்சல் தெரியாததால் காருடன் கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் மற்றும் நாமக்கல் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து 5 மணிநேரம் போராடி கிரேன் எந்திரத்தின் உதவியுடன் கார் மற்றும் ராஜேந்திரனை மீட்டனர்.

சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. தனராசு தலைமையில் சேந்தமங்கலம் இன்ஸ்பெக்டர் கோவிந்த ராசன், சப்-இன்ஸ்பெக்டர் பிரியா உள்ளிட்ட போலீசார், கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தகுமார் ஆகியோர் வந்தனர். விபத்து குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

Similar News