தமிழ்நாடு

நாளுக்கு நாள் அதிகரிக்கும் போலி செயலிகள்- உஷாராக இருக்க போலீஸ் வேண்டுகோள்

Published On 2023-01-03 06:43 GMT   |   Update On 2023-01-03 06:43 GMT
  • அந்தரங்க ஆபாச மோசடியால் ஒவ்வொரு மாதமும் நூற்றுக்கணக்கான வாலிபர்கள் ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
  • ஆன்லைனில் பணத்தை இழந்தால் உடனடியாக 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவியுங்கள்.

இன்றைய நாகரிக உலகில் எல்லாம் ஆன்லைனில் கிடைக்கிறது. இருந்த இடத்தில் இருந்தே நாம் உண்ணும் உணவில் இருந்து உடுத்தும் உடை வரை அத்தனையும் பெற்றுவிட முடிகிறது.

இப்படி நல்ல விஷயங்களுக்காக பல்வேறு ஆன்லைன் செயலிகள் செயல்பட்டு வரும் நிலையிலும் மூளையை தவறாக கசக்கி சிந்திக்கும் மோசடி பேர்வழிகள் பலர் சபல எண்ணங்களை கொண்ட வாலிபர்களுக்கு வலை விரிப்பதற்காகவே மோசடியாக பல்வேறு செயலிகளை தொடங்கி பணம் பறித்து வருகிறார்கள்.

இணையதளங்களில் ஆபாச செயலிகளை தேடி தேடி பார்ப்பவர்கள் யார்? முகநூல் பக்கங்களில் அந்த மாதிரியான பதிவுகளை துணிச்சலுடன் வெளியிடுபவர்கள் யார் என தேடி கண்டுபிடித்து அவர்களது செல்போன் எண்களுக்கு மோசடி செயலி பற்றிய லிங்குகளை அனுப்புகிறார்கள்.

இந்த லிங்குகளை அழுத்தி அதன் உள்ளே சென்றதும் மறுமுனையில் பெண் ஒருவர் சாட்டிங் செய்வார். அவர் எதிர்முனையில் இருப்பவரின் மனநிலையை புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படுவார்.

இந்த 'ஆன்லைன் டேட்டிங்' சில நாட்கள் நீடிக்கும். இதன் பின்னர் தான் இறுதிக்கட்ட காட்சிகள் அரங்கேறும். எதிர்முனையில் பேசிய பெண் 'நீங்கள் என்னை அப்படி பார்க்க விரும்புகிறீர்களா? என கேட்பார். இதனை கேட்டு உஷாராகி தொடர்பை துண்டிக்கும் ஆண்கள் தப்பித்துக்கொள்வார்கள்.

ஆனால் சல்லாப எண்ணம் கொண்ட ஆண்கள் சிலர் 'ஆம்' என்று பதில் அளித்து தூண்டிலில் சிக்கும் மீன் போல மாட்டிக் கொள்கிறார்கள்.

எதிர்முனையில் பேசும் பெண் 'வீடியோ காலில் வாங்க' என்று அழைத்ததும் அவசர அவசரமாக அதற்கு தயாராகும் ஆண்கள் ஆசையால் ஆபத்தில் சிக்கிக்கொள்வது தொடர்கதையாகிக்கொண்டே இருக்கிறது.

பெண்ணின் அழகை ரசிக்கும் ஆவலில் சபல எண்ணம் கொண்ட ஆண்கள் வீடியோ காலில் செல்ல சில நிமிடங்களில் வீடியோ கால் கட் ஆகி விடும். அடுத்த நொடியே வாலிபரின் ரகசிய வீடியோ அந்தரங்கமாக அவருக்கே அனுப்பப்பட்டிருக்கும்.

இதன் பின்னர்தான் மோசடி பேர்வழி வாலிபரிடம் பேசி பணம் பறிப்பார். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக வாலிபர் ஒருவர் ரூ.37 லட்சம் வரையில் ஆன்லைன் மோசடியில் இழந்துள்ளார்.

இதுபோன்ற அந்தரங்க ஆபாச மோசடியால் ஒவ்வொரு மாதமும் நூற்றுக்கணக்கான வாலிபர்கள் ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க... பெண்களை போலவே வசிய குரலில் பேசி பணம் பறிக்கும் மோசடி ஆசாமிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருப்பதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இதுபோன்று மோசடியாக பேசிய வாலிபரை நம்பி இளைஞர் ஒருவர் திருமணம் வரை சென்றுவிட்டது தான் மிகப்பெரிய வேடிக்கை. எதிர்முனையில் தன்னுடன் மாதக்கணக்கில் பெண் குரலில் பேசிக் கொண்டிருப்பவர் ஆண் என்பதையே அறியாமல் அவர் கேட்கும் போதெல்லாம் பணத்தை வாரி இறைத்துள்ளார். அந்த பட்டதாரி இளைஞர்.

பல லட்சங்களை இழந்த பின்னரே தான் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருப்பதையே அவர் உணர்ந்தார். பின்னர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை பாய்ந்தது.

இப்படி வக்கிரமாக பேசி மோசடி செயலிகள் மூலம் பணம் பறிக்கும் நபர்கள் இணையதளங்களை ஆக்கிர மித்துள்ள நிலையில் கடன் செயலிகள் மூலமாகவும் மோசடி பேர்வழிகள் ஒரு புறம் அப்பாவி மக்களின் பணத்தை சுரண்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

'உங்களுக்கு உடனடி கடன் வேண்டுமா" உடனே கிளிக் செய்யுங்கள் என்கிற போலி செயலிகள் மூலமாக பணத்தேவை அதிகமாக உள்ளவர்கள் தினம் தங்களிடம் இருக்கும் பணத்தையும் இழந்து தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

கடனுக்கான சேவை கட்டணம் என கூறி சில ஆயிரங்களில் தொடங்கி லட்சக்கணக்கில் பணத்தை இழந்த பின்னரே பாதிக்கப்பட்ட பலர் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருப்பதை உணர்கிறார்கள்.

இவைகள் தவிர... உங்கள் வங்கி கணக்கு பிளாக் ஆகி விடும். ஏ.டி.எம். கார்டு செயல் இழக்கப்போகிறது... என்பது போன்ற பல்வேறு பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டும் ஆன்லைன் மோசடி ஆசாமிகள் உஷாராகிக் கொண்டிருக்கிறார்கள். எனவே நாம் தான் உஷாராக இருக்க வேண்டும் என்கிறார் சைபர் கிரைம் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, 'பாலியல் ரீதியாக இளைஞர்களை அழைத்து மோசடியை அரங்கேற்றும் குற்றவாளிகள் சமீபகாலமாக பெருகிக் கொண்டே இருக்கிறார்கள். இதுதொடர்பாக சமீபத்தில் 10 புகார்கள் வரை வந்துள்ளன.

ஆன்லைன் மூலமாக ஏற்படும் இதுபோன்ற தொடர்புகள் நீடித்தால் நிச்சயம் ஆபத்தில் சிக்கிக் கொள்வீர்கள். எனவே அதில் மாட்டிக்கொள்ள வேண்டாம்.

அதேநேரத்தில் ஆன்லைனில் பணத்தை இழந்தால் உடனடியாக 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவியுங்கள். அப்போது நீங்கள் இழந்த பணம் திரும்ப கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

காலம் தாழ்த்தி புகார் அளிப்பது பலன் அளிக்காது. சைபர் கிரைம் குற்றவாளிகளின் வங்கி கணக்குக்கு பணம் போகும் முன்பு 24 மணிநேரத்தில் பணத்தை பிளாக் செய்தால் மட்டுமே இழந்த பணத்தை திரும்ப பெற முடியும்' என்றார்.

உங்கள் போனிலும் தற்போது இதுபோன்ற செயலிகள் இருக்கலாம். உஷாராக இருங்கள்.

Tags:    

Similar News