அரசை காரணம் சொல்லி அரிசியில் கொள்ளை லாபம்- மூட்டைக்கு ரூ.250 வரை உயர்வு
- ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது.
- 25 கிலோ கொண்ட அரிசி மூட்டைகளுக்குத்தான் மத்திய அரசு ஜி.எஸ்.டி. விதித்து இருந்தது. ஆனால் இப்போது அதை 26 கிலோவாக பேக்கிங் செய்கிறார்கள்.
அரிசி, பால், தண்ணீர், மின்சாரம் போன்றவை மக்களின் அத்தியாவசிய தேவைகள். என்ன விலை கொடுத்தும் இந்த பொருட்களை மக்கள் வாங்கியே தீர வேண்டும். இதை மனதில் கொண்டு இந்த பொருட்கள் மீது இஷ்டத்துக்கு விலையை உயர்த்தி கொள்ளை லாபம் சம்பாதிப்பது வாடிக்கையாகி விட்டது.
பொதுவாக மழைக்காலங்கள், நெல் விளைச்சல் குறைந்த காலங்களில் அரிசி விலை சற்று உயரும். அதன் பிறகு குறைந்து விடும். இதை பொதுமக்களும் கண்டு கொள்வதில்லை. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 25 கிலோ கொண்ட அரிசி மூட்டை மற்றும் 5 கிலோ, 10 கிலோ பேக்கிங் செய்யப்பட்ட அரிசி மூட்டைகளுக்கு 3 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டது.
இந்த வரி விதிப்பை காரணம் காட்டி அரிசி விலையை உயர்த்தினார்கள். அப்படி பார்த்தாலும் ஆயிரம் ரூபாய் அரிசி மூட்டைக்கு 30 ரூபாய்தான் கூடுதலாக உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ரூ.100 வரை உயர்த்தினார்கள். அதற்கு அரசு விதித்த ஜி.எஸ்.டி. வரியே காரணம் என்று மக்களிடம் சொன்னார்கள். ஆனால் இப்போது அரசுக்கு டிமிக்கி கொடுத்து ஜி.எஸ்.டி.யில் இருந்து வியாபாரிகள் தானாகவே விலக்கு பெற்று விட்டார்கள்.
அதாவது 25 கிலோ கொண்ட அரிசி மூட்டைகளுக்குத்தான் மத்திய அரசு ஜி.எஸ்.டி. விதித்து இருந்தது. ஆனால் இப்போது அதை 26 கிலோவாக பேக்கிங் செய்கிறார்கள். அந்த பைகளின் மீது 26 கிலோ அச்சிட்டு விற்பனைக்கு விட்டுள்ளார்கள்.
சட்டப்படி 25 கிலோவுக்குத்தான் ஜி.எஸ்.டி. வாங்க முடியும். 26 கிலோ என்றால் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் இல்லையாம். இது சட்டத்தில் இருந்து நழுவுவதற்கோ இல்லை சட்டத்தை ஏமாற்றுவதற்கோ என்று இருந்தால் பரவாயில்லை.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது. எனவே வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காகத்தான் இந்த ரகசிய ஏற்பாடு என்கிறார்கள். அப்படியானால் வரி உயர்வை ரத்து செய்து அரிசியை குறைந்த விலைக்குத்தானே விற்க வேண்டும்.
அப்படி யாரும் விற்கவில்லை. 30 ரூபாய் ஜி.எஸ்.டி. உயர்வுக்கு 100 ரூபாய் உயர்த்தியதை அப்படியே வைத்துள்ளார்கள். இப்போது அதிலும் கூடுதலாக ரூ.1200 முதல் ரூ.1250 வரை விற்கப்பட்ட மூட்டை விலையை ரூ.1400 முதல் ரூ.1450 வரை உயர்த்தி இருக்கிறார்கள். சராசரியாக ஒரு கிலோ அரிசி ரூ.3 முதல் 4 வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இது என்ன நியாயம்?
கூடுதல் விலை உயர்வுக்கு என்ன காரணம்? ஆக உயர்த்தப்பட்ட விலை முழுவதும் அரிசி விற்பனையாளர்களுக்கு லாபமாகி விடுகிறது. இதற்காக அரிசி உற்பத்தியாளர்கள் விற்பனையாளர்களுக்கும் கமிஷனை சற்று உயர்த்தி கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.
அரிசி விலை உயர்வுக்கான உண்மையான காரணத்தை இதுவரை யாரும் சொல்லவில்லை. ஒன்று ஜி.எஸ்.டி. வரி உயர்வு என்றார்கள். இன்னொரு பக்கம் விளைச்சல் இல்லை என்றார்கள். இன்னொரு புறத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது என்கிறார்கள். எதுதான் உண்மையான காரணம் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் எல்லாம் அரசுதான் காரணம் என்று பழியை அரசு மீது போட்டு கொள்ளை லாபம் மட்டும் அடிக்கிறார்கள் என்பது தெரிகிறது.
மத்திய அரசோ, மாநில அரசோ... சம்பந்தப்பட்ட துறைகள் இந்த விசயத்தில் தனிக்கவனம் செலுத்தி எங்கே குளறுபடி என்பதை கண்டறிந்து இதை கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்பதே வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு.