தமிழ்நாடு செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தல்- உரிய அனுமதி இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல்

Published On 2023-01-20 09:44 IST   |   Update On 2023-01-20 09:44:00 IST
  • தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் வந்துள்ளதால் 3 பறக்கும் படை மற்றும் 3 கண்காணிப்புக்குழு அமைக்கப்பட உள்ளது.

ஈரோடு:

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி மாவட்ட தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

தேர்தல் நடத்தும் அலுவலராக மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரி பார்க்கும் பணி நேற்று தொடங்கியது. இதற்காக பெல் நிறுவனத்தைச் சேர்ந்த 8 பொறியாளர்கள் கொண்ட குழு வந்துள்ளது.

இன்று 2-வது நாளாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரி பார்க்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த பணி இன்னும் மூன்று நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில் முழு அளவில் விவிபேட் எந்திரம் (வாக்களித்ததை உறுதி செய்யும் எந்திரம்) பயன்படுத்தப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் வந்துள்ளதால் 3 பறக்கும் படை மற்றும் 3 கண்காணிப்புக்குழு அமைக்கப்பட உள்ளது. இதேபோல் வருமான வரி அதிகாரிகள் கொண்ட குழுவும் அமைக்கப்பட உள்ளது.

இந்த குழு இன்று மாலை முதல் தங்களது பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இதேப்போல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரும்பாலும் ஜவுளி சார்ந்த தொழில்கள் அதிக அளவில் உள்ளன. சிறிய ஜவுளிக்கடைகள் முதல் பெரிய ஜவுளிக்கடைகள் வரை 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு சர்வ சாதாரணமாக கோடிக்கணக்கில் பண வர்த்தகம் நடைபெற்று வருகிறது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் தொழிலதிபர்கள், வியாபாரிகள் என்ன செய்வதென்று திகைத்து வருகின்றனர்.

Tags:    

Similar News