தமிழ்நாடு செய்திகள்

சுயேச்சை வேட்பாளர்களுக்கு நள்ளிரவு வரை சின்னம் ஒதுக்கிய தேர்தல் அதிகாரிகள்

Published On 2023-02-11 12:42 IST   |   Update On 2023-02-11 12:42:00 IST
  • 77 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுவதாக தேர்தல் அதிகாரிகள் முறைப்படி அறிவித்தனர்.
  • அதிகளவில் சுயேச்சைகள் போட்டியிடுவதால் சின்னம் ஒதுக்குவதில் கடும் சிரமம் நிலவியது.

ஈரோடு:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 31-ந் தேதி தொடங்கி 7-ந் தேதி நிறைவடைந்தது. இதில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் உள்பட 96 பேர் 121 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

வேட்பு மனுக்கள் பரிசீலனையில் 83 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டு 38 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் வேட்பு மனுக்கள் திரும்ப பெற கடைசி நாளான நேற்று அ.ம.மு.க. வேட்பாளர் மற்றும் சுயேச்சைகள் 5 பேர் மனுவை திரும்ப பெற்றனர்.

பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 77 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுவதாக தேர்தல் அதிகாரிகள் முறைப்படி அறிவித்தனர்.

இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கை சின்னம், அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ். தென்னரசுக்கு இரட்டை இலை சின்னமும், தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்துக்கு முரசு சின்னமும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு கரும்புடன் விவசாயி சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட சில அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டது.

தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்குவதில் கடும் சிரமம் ஏற்பட்டது. சுயேச்சைகளுக்காக தேர்தல் ஆணையம் சார்பில் 151 சின்னங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தது.

இதில் குறிப்பிட்ட ஒரு சின்னத்தை பெரும்பாலான சுயேச்சை வேட்பாளர்கள் கேட்டனர். இதில் குலுக்கல் முறையில் அவர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது. இதே போல் பலரும் குறிப்பிட்ட சின்னத்தை கேட்டதால் நள்ளிரவு வரை சுயேச்சை வேட்பாளர்களுக்கு தேர்தல் அதிகாரிகள் குலுக்கல் முறையில் சின்னங்களை ஒதுக்கீடு செய்தனர்.

நள்ளிரவு 11 மணி வரை சுயேச்சைகளுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. பின்னர் ஒரு வழியாக குலுக்கல் முறையில் அனைவருக்கும் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த தேர்தலில் அதிகளவில் சுயேச்சைகள் போட்டியிடுவதால் சின்னம் ஒதுக்குவதில் கடும் சிரமம் நிலவியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News