தமிழ்நாடு

கோர்ட்டுக்கு விசாரணைக்கு அங்கிட் திவாரியை அழைத்து வந்த காட்சி.

லஞ்ச வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி கோர்ட்டில் ஆஜர்: 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

Published On 2023-12-12 09:40 GMT   |   Update On 2023-12-12 09:40 GMT
  • நீதிமன்றத்தில் அனுமதி பெற்றால் முதல் வகுப்பு அறை ஒதுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
  • மதுரை மத்திய சிறையில் இருந்து அங்கிட் திவாரி பலத்த பாதுகாப்புடன் திண்டுக்கல் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் அரசு டாக்டர் சுரேஷ்பாபுவின் சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ.20 லட்சம் லஞ்சம் பெற முயன்றபோது கடந்த 1ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி கைது செய்யப்பட்டார்.

அதன்பின் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். மறுநாள் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த அவருக்கு டாக்டர்கள் கவுன்சிலிங் அளித்தனர். தான் வருமானவரி செலுத்தக்கூடிய நபர் என்பதால் தனக்கு முதல் வகுப்பு அறை வேண்டும் என அவர் வைத்த கோரிக்கையை சிறைத்துறையினர் ஏற்க மறுத்துவிட்டனர்.

நீதிமன்றத்தில் அனுமதி பெற்றால் முதல் வகுப்பு அறை ஒதுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கைதிகள் வாரம் ஒருமுறை செல்போன் மூலம் தங்கள் குடும்பத்தினரிடம் பேச அனுமதி வழங்கப்படுகிறது. இந்த வசதியை பயன்படுத்தி அங்கிட் திவாரி தனது குடும்பத்தினரிடம் பேசியபோது கதறி அழுதார். அப்போது அவர்கள் அங்கிட் திவாரிக்கு ஆறுதல் கூறிச்சென்றனர்.

இதனிடையே அங்கிட் திவாரி தான் பெற்ற லஞ்ச பணத்தை தன்னுடன் பணியாற்றும் மேலும் சில அதிகாரிகளுக்கு வழங்கியதாக தெரிவித்திருந்தார். எனவே லஞ்ச பணத்தில் வேறு யாருக்கேனும் பங்கு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அங்கிட் திவாரியை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கும்படி மனு அளித்திருந்தனர். அந்த மனு இன்று நீதிபதி மோகனா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்காக மதுரை மத்திய சிறையில் இருந்து அங்கிட் திவாரி பலத்த பாதுகாப்புடன் திண்டுக்கல் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அவரது சார்பில் வக்கீல் செல்வம் என்பவர் ஆஜரானார்.

லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான வக்கீல்கள் இந்த வழக்கில் மேலும் சில முக்கிய தகவல்கள் சேகரிக்க உள்ளதால் 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்தனர். இதற்கு அங்கிட் திவாரியின் வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி லஞ்ச ஒழிப்புத்துறையினர் கேட்ட 3 நாள் காவலை வழங்கி உத்தரவிட்டனர். இதனையடுத்து போலீசார் அவரை தங்கள் பாதுகாப்பில் அழைத்துச் சென்று விசாரணை நடத்த அழைத்துச் சென்றனர். மீண்டும் 14ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News