தமிழ்நாடு

சென்னிமலை பகுதியில் நில அதிர்வால் பொதுமக்கள் பீதி

Published On 2022-06-30 09:17 GMT   |   Update On 2022-06-30 09:17 GMT
  • நில அதிர்வு ஏற்படுவதற்கு முன்பு பயங்கர வெடிசத்தமும் கேட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியில் உறைந்தனர்.
  • சிறிய அளவில் நில அதிர்வு இருந்ததால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.

சென்னிமலை:

ஈரோடு மாவட்டம் சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வாய்ப்பாடி, மரப்பாளையம், காளிக்காவலசு, அய்யம்பாளையம், 1010 நெசவாளர் காலனி, எம்.பி.என். காலனி ஆகிய பகுதிகளில் நேற்று இரவு 9 மணி அளவில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து வீட்டில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். மேலும் வீட்டின் சுவற்றில் மாட்டியிருந்த போட்டோ விழுந்து உள்ளது. மேலும் பல்வேறு வீடுகளில் பாத்திரங்கள் உருண்டு ஓடி உள்ளது.

நில அதிர்வு ஏற்படுவதற்கு முன்பு பயங்கர வெடிசத்தமும் கேட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியில் உறைந்தனர்.

இதுகுறித்து வரப்பாளையத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரிடம் கேட்டபோது கூறியதாவது:-

இரவு 9 மணி அளவில் நாங்கள் வீட்டில் இருந்தபோது திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இதையடுத்து எங்கள் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே ஓடி வந்து அருகில் உள்ள கோவிலில் தஞ்சம் அடைந்தோம். சிறிய அளவில் நில அதிர்வு இருந்ததால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. மேலும் பல்வேறு இடங்களில் வீடுகளில் பாத்திரம் உருண்டு ஓடியதாகவும், வீட்டின் சுவற்றில் இருந்த போட்டோக்கள் கீழே விழுந்ததாகவும் தகவல் பரவி உள்ளது. நில அதிர்வுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்றார்.

இந்த சம்பவம் சென்னிமலை மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் வேகமாக பரவியது. இதையடுத்து சென்னிமலை பகுதி மக்கள் விடிய விடிய அச்சத்துடன் காணப்பட்டனர்.

Tags:    

Similar News