தமிழ்நாடு

புயல் சின்னத்தால் ராமேசுவரம், பாம்பனில் தடைக்காலம் முடிந்து மீனவர்கள் கடலுக்கு செல்வதில் சிக்கல்

Published On 2023-06-12 06:59 GMT   |   Update On 2023-06-12 06:59 GMT
  • இந்திய வானிலை மைய அறிவிப்பு ராமேசுவரம் மீனவர்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
  • கடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என கவலையுடன் தெரிவித்தனர்.

ராமேசுவரம்:

தமிழக கடற்பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது.

அதன்படி கடற்கரை மாவட்டமான திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை வங்க கடலில் மீனவர்கள் மேற்கண்ட காலங்களில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவதில்லை. நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கடற்கரையில் இருந்து சில மைல் தூரத்தில் கடலில் மீன்பிடித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் 15-ந்தேதி முதல் வருகிற 14-ந்தேதி வரை 60 நாட்கள் மீன்பிடி தடை காலமாக அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான விசைப்படகு மீனவர்கள் வேலை இழந்தனர். இந்த காலகட்டங்களில் தங்களது படகு, வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நாளை மறுநாள் (14-ந்தேதி) இரவு டன் மீன்பிடி தடை காலம் முடிவடைகிறது. 2 மாதம் தடை முடியும் நிலையில் ராமேசுவரம், பாம்பன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். படகுகளில் டீசல் நிரப்புவது, ஐஸ் கட்டிகளை இருப்பு வைப்பது போன்றவற்றில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் அரபி கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளது. இதன் காரணமாக அடுத்த சில நாட்கள் ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

புயல் சின்னம் காரண மாக வருகிற 14-ந்தேதி வரை ராமேசுவரம் மீன வர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இந்த அறிவிப்பு ராமேசுவரம் மீனவர்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

புயல் சின்னத்தால் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருப்பதால் மீன்பிடி தடைக் காலம் முடிந்து ராமேசுவரம் பகுதி விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மீன்பிடி தடை காலத்தில் வேலை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டது. அரசு கொடுத்த நிவாரண உதவியும் போதவில்லை. எனவே வேறு வேலைக்கு சென்றோம். வருகிற 14-ந்தேதி முதல் கடலுக்கு செல்ல தயாராகி வந்த நிலையில் கடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என கவலையுடன் தெரிவித்தனர்.

Tags:    

Similar News