தமிழ்நாடு

மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 200 கனஅடி நீர் திறப்பு

Published On 2024-03-27 07:23 GMT   |   Update On 2024-03-27 07:23 GMT
  • நடப்பு ஆண்டில் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியாமல் போனது.
  • இன்று முதல் 15 நாட்களுக்கு தண்ணீர் வெளியேற்றப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேட்டூர்:

மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 15-ந் தேதி வரை 137 நாட்களுக்கு 9.60 டி.எம்.சி, தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் 16,443 ஏக்கர், நாமக்கல் மாவட்டத்தில் 11,327 ஏக்கர், ஈரோடு மாவட்டத்தில் 17,230 ஏக்கர் என மொத்தம் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் 3 மாவட்ட மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி அடையும்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்தது மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்காது உள்ளிட்ட காரணங்களால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது. இதனால் நடப்பு ஆண்டில் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியாமல் போனது.

இதனால் கிழக்கு, மேற்கு கால்வாய் கரையோர பகுதியில் குடிநீர் பற்றாக்குறை நிலவியது.

இந்நிலையில் இன்று கால்வாய் கரையோர மக்களின் கோரிக்கையை ஏற்று மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு, மேற்கு கரை கால்வாயில் வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.இன்று முதல் 15 நாட்களுக்கு தண்ணீர் வெளியேற்றப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News