சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.
திருப்பூரில் ரெயிலில் அடிபட்டு இறந்த வாலிபரின் கையை கவ்விச்சென்ற நாய்கள்- பரபரப்பு
- கை மட்டும் தனியாக கிடந்ததால், யாராவது கொலை செய்யப்பட்டிருக்கலாம் என எண்ணிய போலீசார் அப்பகுதி முழுவதும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
- போலீசார் வாலிபர் உடல் மற்றும் கையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மண்ணரை கேட்டு தோட்டம் காட்டுப்பகுதியில் ஆண் ஒருவரின் கை தனியாக கிடந்தது. இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்ததுடன் உடனடியாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு கை மட்டும் தனியாக கிடந்ததால், யாராவது கொலை செய்யப்பட்டிருக்கலாம் என எண்ணிய போலீசார் அப்பகுதி முழுவதும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலையில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் கை இல்லாத நிலையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதனால் வாலிபர் ரெயிலில் அடிபட்டு இறந்த நிலையில், அங்கு சுற்றி திரிந்த நாய்கள் வாலிபரின் கையை கவ்விச்சென்று காட்டுப்பகுதியில் போட்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் வாலிபர் உடல் மற்றும் கையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து கிடந்த வாலிபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.