தமிழ்நாடு

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க ஜனவரி 31-ந் தேதியுடன் அவகாசம் முடிகிறது

Published On 2023-01-23 05:55 GMT   |   Update On 2023-01-23 05:55 GMT
  • மின் கட்டண இணைப்புடன் ஆதார் எண் இணைத்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது.
  • படித்த இளைஞர்கள் பலர் தங்களது செல்போனில் வெப்சைட்டுக்குள் சென்று எளிதில் ஆதாரை இணைத்துவிட்டனர்.

சென்னை:

தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.

100 யூனிட் மானியம் பெறும் பயன்பாட்டாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதாரை பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் முதல் மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டு சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது.

மின் வாரிய அலுவலகங்களிலும் ஆதார் நம்பரை இணைத்து கொடுக்கிறார்கள். இதனால் ஒவ்வொருவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதார் நம்பரை இணைத்து வருகிறார்கள்.

படித்த இளைஞர்கள் பலர் தங்களது செல்போனில் வெப்சைட்டுக்குள் சென்று எளிதில் ஆதாரை இணைத்துவிட்டனர். மற்ற பொதுமக்கள்தான் கம்ப்யூட்டர் மையம் அல்லது மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று மின் இணைப்புடன் ஆதாரை இணைத்து வருகின்றனர்.

மொத்தம் உள்ள 2.33 கோடி வீடு மின் இணைப்புகளில் இதுவரை 2811 பிரிவு அலுவலக சிறப்பு முகாம்கள் மூலம் 1 கோடியே 52 லட்சம் பேர் ஆதாரை இணைத்துள்ளனர். ஆன்லைன் மூலம் 17 லட்சம் பேர் இணைத்துள்ளனர். இது தவிர மின்வாரிய அலுவலகங்கள் மூலம், இணைத்தவர்களையும் சேர்த்து நேற்றுவரை மொத்தம் 2.9 லட்சம் பேர் ஆதாரை இணைத்துள்ளதாக மின் சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஆதாரை இணைப்பதற்கு ஜனவரி 31-ந் தேதி வரை காலக்கெடு உள்ளது. எனவே ஆதாரை இணைக்காத மின் நுகர்வோர் உடனடியாக மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News