தமிழ்நாடு செய்திகள்

தவறான அறுவை சிகிச்சையால் காலை இழந்த கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு

Published On 2022-11-15 08:25 IST   |   Update On 2022-11-15 08:46:00 IST
  • தவறான ஆபரேசன் காரணமாக மறுநாளே பிரியாவிற்கு கால் பெரிய அளவு வீங்கி இருக்கிறது.
  • உயிருக்கு ஆபத்து என்ற மருத்துவர்கள் கூறியதை அடுத்து, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரியாவுக்கு வலது கால் துண்டித்து அகற்றப்பட்டது.

சென்னை:

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார்-உஷாராணி தம்பதியின் மகள் பிரியா, ராணிமேரி கல்லூரியில் உடற்கல்வியியல் பாடத்தை எடுத்து படித்து வந்தார். கால்பந்து வீராங்கனையாகும் லட்சியத்துடன் தினமும் பயிற்சியில் ஈடுபட்ட வந்த அவர், கடந்த மாதம் 20-ந்தேதி வலது காலில் சுளுக்கு ஏற்பட்டது போல் வலியால் அவதிப்பட்டுள்ளார். இதையடுத்து பெரியார் நகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு நடந்த தவறான ஆபரேசன் காரணமாக மறுநாளே கால் பெரிய அளவு வீங்கி இருக்கிறது. இதையடுத்து அவரது உயிருக்கு ஆபத்து என்ற மருத்துவர்கள் கூறியதை அடுத்து, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரியாவுக்கு வலதுகால் துண்டித்து அகற்றப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தற்போது மாணவிக்கு உள்ள காயம் சரியான உடன், பெங்களூருவில் இருந்து செயற்கை கால் வாங்கி பொருத்தப்படும் என்றும், அந்த மாணவிக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி இருந்தார். மருத்துவக்குழு அளித்துள்ள விளக்கத்தின் அடிப்படையில் மாணவிக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி இன்று காலை 7.15 மணிக்கு உயிரிழந்தார். இதையடுத்து மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News