தமிழ்நாடு

கொரோனாவால் நிறுத்தப்பட்ட கோவை-இலங்கை இடையேயான விமான சேவை விரைவில் தொடக்கம்

Published On 2023-06-18 05:02 GMT   |   Update On 2023-06-18 05:02 GMT
  • 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சேவை தொடங்க பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது.
  • சேவையால் கோவையில் இருந்து பல உலக நாடுகளுக்கு செல்பவர்களுக்கு மிகுந்த பயன்தரும்.

கோவை:

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சேவை வழங்கப்பட்டு வருகிறது.

2020-ம் ஆண்டு வரை கோவை- இலங்கை இடையே ஸ்ரீலங்கன் ஏர் லைன்ஸ் விமான நிறுவனம் சார்பில் சேவை வழங்கப் பட்டு வந்தது. கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு வழங்கப்பட்டு வந்த சேவையை அந்நிறுவனம் தற்காலிகமாக ரத்து செய்தது.

இந்த விமான சேவையை விரைவில் மீண்டும் தொடங்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை-இலங்கை இடையே கடந்த 2003-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை விமான சேவை வழங்கப்பட்டு வந்தது. நிர்வாக காரணங்களால் அது நிறுத்தப்பட்டது.

இலங்கை நாட்டின் கொழும்பு நகருக்கு கோவையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் விமான சேவை கடந்த 2017-ல் தொடங்கியது. முதலில் ஞாயிறு, செவ்வாய், வியாழன், வெள்ளிக்கிழமை என வாரத்தில் 4 நாட்கள் இயக்கப்பட்டது.

அதன் பின்னர் வாரத்தின் அனைத்து நாட்களும் விமான சேவை வழங்கப்பட்டது.

கொழும்பு விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானம் மதியம் 2.35 மணியளவில் கோவையில் தரையிறரங்கும். மீண்டும் 3.35 மணியளவில் கோவையில் இருந்து புறப்பட்டு கொழும்பு செல்லும்.

சேவை தொடங்கப்பட்ட நாள் முதல் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்பட்டது. கொரோனா தொற்று பரவலால் 2020-ம் ஆண்டு முதல் தற்காலிகமாக சேவை நிறுத்தப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சேவை தொடங்க பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது.

கோவை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த ஓடுதள புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து 24 மணி நேரமும் விமான நிலையம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

எனவே இலங்கை நாட்டுக்கு மீண்டும் தொடங்கப் பட உள்ள விமான சேவைக்கு ஸ்லாட் என்று சொல்லக்கூடிய நேரம், ஓடுபாதை, விமானம் நிறுத்துமிடம் ஒதுக்கீடு செய்யும் பணிகள் முடிவு செய்தபின் அதிகார பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கொங்கு குளோபல் போரம் இயக்குனர் நந்தகுமார் கூறும்போது, ஒரு மணி பயண நேரத்தில் இலங்கை சென்றடையும். இந்த விமான சேவையால் கோவையில் இருந்து ஐக்கிய அரபு நாடுகள், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல உலக நாடுகளுக்கு செல்பவர்களுக்கு மிகுந்த பயன்தரும் என்றார்.

Tags:    

Similar News