தமிழ்நாடு

"மிச்சாங்" புயல் பொது நிவாரண நிதி - கோடிகளில் வழங்கிய நிறுவனங்கள்

Published On 2023-12-09 09:46 GMT   |   Update On 2023-12-09 09:46 GMT
  • மிச்சாங் புயல் இயற்கை பேரிடரால் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • திருமாவளவன் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.

சென்னை:

தமிழ்நாட்டில் 'மிச்சாங்' புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. இந்த இயற்கை பேரிடரால் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைத்திடவும், புதிய வாழ்வாதாரங்களை மீள உருவாக்கிடவும் தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்களும், தன்னார்வலர்களும், பொதுமக்களும் முதலமைச்சர் பொது நிவாரண நிதி வாயிலாக, மிச்சாங் மீட்புப் பணிகளுக்குத் தங்களின் பங்களிப்பை வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதன் தொடக்கமாக தன்னுடைய ஒரு மாத கால ஊதியத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.

* புயல் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு டி.வி.எஸ். நிறுவனம் ரூ.3 கோடி வழங்கி உள்ளது.

* அசோக் லேலண்ட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் ஷேணு அகர்வால், மிச்சாங் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 3 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

* PSG குழுமத்தின் லீப் கிரீன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜீவ் கார்த்திகேயன் மற்றும் முதன்மை செயல் அலுவலர் தேவ் ஆனந்த் ஆகியோர் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள்.

 * விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், கட்சியின் பாராளுமன்ற மற்றும் சட்டசபை உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத் தொகையான 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மிச்சாங் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்கான பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.

Tags:    

Similar News