தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய ஆக்கி அணியில் இடம்பிடித்த இளம் வீரரான அரியலூரை சேர்ந்த கார்த்திக் வீட்டுக்கு நேரில் சென்று அவர்கள் வசிப்பதற்கு வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையை வழங்கிய காட்சி.


அரியலூர் இளம் ஆக்கி வீரரின் குடிசை வீட்டுக்கு நேரில் சென்று நெகிழ்ச்சியை ஏற்படுத்திய முதலமைச்சர்

Published On 2022-11-29 12:38 IST   |   Update On 2022-11-29 12:38:00 IST
  • பெங்களூருரில் அமைந்துள்ள சாய் விளையாட்டு மையத்தில் பயிற்சி பெற்ற கார்த்திக், இந்திய ஆக்கி அணிக்குத் தேர்வானார்.
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய ஆக்கி அணி வீரர் கார்த்திக் குடும்பத்தினரை அவர்களது வீட்டிற்கே சென்று நேரில் சந்தித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.

அரியலூர்:

அரியலூர் ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் கார்த்திக். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவரது தந்தை செல்வம் வங்கியில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். தாய் வீட்டு வேலை செய்கிறார். ஏழ்மையான நிலையிலும் கார்த்திக்கிற்கு விளையாட்டின் மீது இருக்கும் ஆர்வத்தை புரிந்துகொண்டு அவருக்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.

பெங்களூருரில் அமைந்துள்ள சாய் விளையாட்டு மையத்தில் பயிற்சி பெற்ற கார்த்திக், இந்திய ஆக்கி அணிக்குத் தேர்வானார். இருப்பினும், பயிற்சி பெறுவதில் அவருக்கு போதிய பண வசதி இல்லாமல் தவித்து வந்தார்.

இதுபற்றிய தகவல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்ய முதலமைச்சர் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார். அதன்படி அப்போதே அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கார்த்திக்கின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரித்தார்.

இதற்கிடையே 2 நாட்கள் அரியலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய ஆக்கி அணி வீரர் கார்த்திக் குடும்பத்தினரை ஓடுகள் வேயப்பட்ட அவர்களது வீட்டிற்கே சென்று நேரில் சந்தித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார். அப்போது ஆக்கி வீரரின் பெற்றோரிடம் நலம் விசாரித்தார்.

பின்னர் அவர்கள் வசிப்பதற்காக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அரியலூர் மாவட்டம் குரும்பஞ்சாவடி திட்டப்பகுதியில் வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையை வழங்கினார். சிறிது நேரம் இருந்த அவர் வெளியே வந்தபோது அப்பகுதியை சேர்ந்த திரளான சிறுவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்ப்பதற்காக காத்திருந்தனர். அவர்களிடம் உற்சாகமாக பேசிய மு.க.ஸ்டாலின் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

முன்னதாக கடந்த 24-ந்தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களுக்கான பாராட்டு விழாவில் இந்திய அணியில் பங்கேற்று வெண்கல பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த ஆக்கி வீரர் கார்த்திக்குக்கு ரூ.10 லட்சம் ஊக்கத்தொகைக்கான காசோலையை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News