தமிழ்நாடு

சென்னை போலீசில் ரூ.3½ கோடியில் டிரோன் பாதுகாப்பு படை- முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைக்கிறார்

Published On 2022-12-15 09:19 GMT   |   Update On 2022-12-15 09:19 GMT
  • சென்னையில் பல பகுதிகள் ரோந்து போலீசார் செல்ல முடியாத பகுதிகளாக உள்ளது.
  • அடையாறு ஆறு சென்னையில் 35 கி.மீ. தூரம் ஓடுகிறது. இந்த ஆற்றின் இருபுறமும் குறைந்தபட்சம் 10 அடி தூரம் போலீசார் செல்ல முடியாத மறைவான பகுதியாக கருதப்படுகிறது.

சென்னை:

சென்னை போலீசில் டிரோன் பாதுகாப்புப்படை உருவாக்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் சென்னை போலீசில் டிரோன் பாதுகாப்பு படை உருவாக்கப்படுவதற்கான பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதற்காக ரூ.3½ கோடி செலவில் 9 டிரோன்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த டிரோன்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் ஒப்படைத்து டிரோன் பாதுகாப்பு படையை தொடங்கி வைக்கிறார்.

இந்த டிரோன் பாதுகாப்பு படைக்காக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படுகிறது. இந்த கட்டுப்பாட்டு அறை கண்டெய்னரில் செயல்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கிருந்து தேவைப்படும் இடத்துக்கு டிரோன்கள் அனுப்பி கண்காணிக்கப்படும்.

இந்த டிரோன்கள் 2 மணி நேரம் மற்றும் 30 கி.மீ. தூரம் தொடர்ச்சியாக பறக்கும் தன்மை கொண்டவை. இந்த டிரோன் மெரினா கடற்கரையில் இருந்து நீலாங்கரை வரை கடற்கரை ஓரத்தில் பறந்து சென்று கண்காணித்து 2 மணி நேரத்தில் கட்டுப்பாட்டு அறைக்கு திரும்ப முடியும். அதில் உள்ள கேமரா மூலம் சம்பவ இடத்தில் இருந்து நேரடியாக காட்சிகளை கட்டுப்பாட்டு அறைக்கு காண்பிக்கும்.

இந்த டிரோன்கள் ஒவ்வொன்றும் 5 கிலோ எடை கொண்டவை. செங்குத்தாக புறப்பட்டு தரை இறங்கும். இவை போலீசாரால் இயக்கப்படும்.

அவர்களில் 18 பேர் விமானி உரிமம் பெற்றுள்ளனர். மேலும் இந்த படையில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், போலீசார் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களும் உள்ளனர்.

ஜி.பி.எஸ். மூலம் டிரோன்கள் செல்லும் பாதையை நிர்ணயிக்க முடியும். மேலும் பறந்து கொண்டிருக்கும் போதே அவற்றை வேறு இடத்துக்கும் திருப்பிவிட முடியும்.

சென்னையில் பல பகுதிகள் ரோந்து போலீசார் செல்ல முடியாத பகுதிகளாக உள்ளது. எனவே போலீசார் செல்ல முடியாத பகுதிகள், புதர் பகுதிகளில் பதுங்கி இருக்கும் சமூக விரோதிகளை இந்த டிரோன்கள் மூலம் கண்காணித்து அவர்களை பிடிக்க முடியும். இது போன்ற பகுதிகளில் சமூக விரோத செயல்கள் அதிகம் நடைபெறுவதால் அதை தடுக்க முடியும்.

அடையாறு ஆறு சென்னையில் 35 கி.மீ. தூரம் ஓடுகிறது. இந்த ஆற்றின் இருபுறமும் குறைந்தபட்சம் 10 அடி தூரம் போலீசார் செல்ல முடியாத மறைவான பகுதியாக கருதப்படுகிறது. அதே போல் கூவம், பக்கிங்காம் கால்வாயின் இருபுற பகுதிகள், கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கிடங்குகள் ஆட்கள் செல்ல முடியாத பகுதிகளாக உள்ளன.

இந்த பகுதிகளில் சமூக விரோத செயல்கள் அதிகம் நடக்கிறது. இந்த டிரோன்கள் மூலம் அதை கட்டுப்படுத்த முடியும். இந்த டிரோன்களில் புதர்களுக்கு அடியில் சமூக விரோதிகள் ஒளிந்து கொண்டிருப்பதை கண்டறியும் தெர்மல் இமேஜிங் கேமராக்கள் போன்ற தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன. கேமராவால் தரையில் உள்ள பொருட்கள் அல்லது சமூக விரோதிகளின் காட்சிகளை 10 மடங்கு பெரிதாக்கி பார்க்க முடியும். தொலைதூர இடங்களில் இருந்து சமூக விரோதிகளை கண்காணிப்பதற்கு இரவு நேரத்திலும் காட்சிகளை படம் பிடிக்கும் கேமராக்கள், டார்ச்லைட், பொது முகவரி அமைப்பு ஆகியவையும் இந்த டிரோனில் உள்ளன.

எனவே ஆற்றின் ஓரங்களிலோ, புதர் பகுதிகளிலோ, இருள் சூழ்ந்த இடங்களிலோ சமூக விரோதிகள் பதுங்கி இருந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டால் இந்த டிரோன் மூலம் அவர்களின் இருப்பிடத்தையும், நடவடிக் கைகளையும் கண்காணிக்க முடியும். அதன்மூலம் அவர்களை பிடித்து குற்ற செயல்களை தடுக்கும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபடுவார்கள்.

இந்த டிரோன்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வகத்தில் அழுத்த சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இதனால் அவை கடல் காற்றை தாங்கும் சக்தி கொண்டதாக மாறும். பலத்த காற்று வீசும் போதும் வேலை செய்யும். இவற்றில் 6 டிரோன்கள் விரைந்து சென்று கண்காணித்து தகவல்களை கொடுக்கும்.

2 டிரோன்கள் நீண்ட தூரம் சென்று கண்காணிக்கும். ஒன்று உயிர்காக்கும் டிரோனாக பயன்படுத்தப்படும்.

இந்த டிரோன்கள் பயன்பாட்டுக்கு வந்ததும் சென்னையில் ஆட்கள் செல்ல முடியாத இடங்களில் நடைபெறும் சமூக விரோத செயல்கள் தடுக்க முடியும்.

Tags:    

Similar News