37 மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் 1000 புதிய வகுப்பறைகள்: முதலமைச்சர் திறந்து வைத்தார்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி வாயிலாக புதிய வகுப்பறைகளை திறந்து வைத்தார்.
- கிராம ஊராட்சிக்கு பொதுமக்கள் வரி, கட்டணங்கள் செலுத்துவதற்கான புதிய இணைய தளத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.150 கோடி செலவில் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டு வந்தது.
இதில் 37 மாவட்டங்களில் கட்டப்பட்ட 1000 புதிய வகுப்பறைகள் இன்று திறந்து வைக்கப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி வாயிலாக இந்த புதிய வகுப்பறைகளை திறந்து வைத்தார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அன்பில் மகேஷ், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கிராம ஊராட்சிக்கு பொதுமக்கள் வரி, கட்டணங்கள் செலுத்துவதற்கான புதிய இணைய தளத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு எளிமைபடுத்தப்பட்ட ஊராட்சி கணக்குகள் திட்டத்திற்கான இணையதளத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.